விழுப்புரத்தில் கொரோனா பாதிப்புடன் தப்பிய டெல்லி இளைஞர்..! 7 நாட்களுக்குப் பின் பிடிபட்டார்!!
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா தொற்று பாதிப்புடன் தப்பிய டெல்லி இளைஞர் ஒரு வாரத்திற்கு பின் செங்கல்பட்டு அருகே பிடிபட்டார்.
டெல்லியைச் சேர்ந்த 32 வயது இளைஞரான நிதின் சர்மா என்பவருக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கடந்த 7-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆரம்ப கட்ட சோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்பதால் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் அவரிடம் எடுக்கப்பட்ட சளி மாதிரி சோதனையில் கொரோனா தொற்று இருப்பது மறுநாள் வந்த ரிப்போர்ட்டில் தெரிய வந்தது.
இதனால் பதறிப் போன விழுப்புரம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினரும், சுகாதாரத் துறையினரும் நிதின் சர்மா என்ற அந்த டெல்லி இளைஞரை வலை வீசி தேட ஆரம்பித்தனர். ஆனால் அந்த டெல்லி நபர் தனி ஆளாக வந்திருந்ததால் அவர் பற்றிய கூடுதல் விபரம் தெரியாததால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த டெல்லி இளைஞருக்கோ அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியாத நிலையில் சுற்றுவதால் மேலும் பலருக்கு தொற்றை பரப்பி விட வாய்ப்பு இருப்பதால் அதிகாரிகள் மேலும் பதற்றமடைந்தனர்.
இதனால் போலீசார் உதவியுடன் விழுப்புரம், புதுச்சேரி மற்றும் சென்னை செல்லும் சாலைகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் சிக்கவில்லை. தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் அந்த டெல்லி இளைஞரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் அச்சடித்து வட மாவட்டங்களில் முக்கிய இடங்களில் ஒட்டி தேடி வந்தனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு அருகே படாளம் என்ற இடத்தில் லாரிகள் நிறுத்துமிடத்தில் சுற்றித் திரிந்த அந்த இளைஞரை பார்த்து சந்தேகப்பட்ட சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது, விழுப்புரம் மருத்துவமனையில் இருந்து தப்பியவர் அவர்தான் என்பது உறுதியானது. தொடர்ந்து அவரை மீண்டும் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கே அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டார்.
ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்றுடன் சுற்றிய அந்த டெல்லி இளைஞருக்கு மீண்டும் பரிசோதனை நடத்த உள்ள நிலையில், யார்? யாருக்கு? அவர் மூலம் கொரோனா தொற்று பரவியதோ? என்று சுகாதார அதிகாரிகளை மேலும் பதற வைத்துள்ளது.







