கோவையில் சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு கொரோனா..!
கோவையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உள்ளோருக்கு சிகிச்சை அளித்து வந்த முதுநிலை மருத்துவர்கள் இருவருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரசு மருத்துவர்களுடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்று வரும் மாணவர்களும் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வந்த மருத்துவ மாணவர்கள் இருவருக்கு இரண்டு நாட்களுக்கு முன் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்துள்ளன.
பரிசோதனையின் முடிவில் இருவருக்கும் தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. 26 மற்றும் 27 வயதுடைய அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 8 மருத்துவர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை அளித்த மேலும் இருவர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.







