நாட்டு மக்களிடம் நாளை மீண்டும் உரை நிகழ்த்துகிறார் பிரதமர் மோடி…! வீடியோ ஒன்றை பகிரவுள்ளதாக டுவிட்டரில் சஸ்பென்ஸ்!!
நாளை காலை 9 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி, நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளார். ஒரு வீடியோ மூலம் முக்கிய தகவலை மக்களிடையே பகிரவுள்ளதாக டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டு சஸ்பென்ஸ் வைத்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவுக்கும் படை எடுத்துவிட்டது. இந்தியாவிலும் இதன் தாக்கம் பெரும் பேரழிவை ஏற்படுத்தலாம் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த மாதம் 20-ந் தேதி நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது கொரோனா அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி, இந்த வைரஸ் பரவலை தடுக்க, மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது ஒன்றே தீர்வு என்றார். இதனால், மக்கள் தாமாக முன் வந்து ஒரு நாள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க அழைப்பு விடுத்தார். அதன்படி மார்ச் 22-ந் தேதி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடந்தேறியது.
பின்னர் மார்ச் 24-ந் தேதி இரவு 8 மணிக்கு 2-வது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, அன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பதை அறிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை விட ஒவ்வொரு குடிமகனின் உயிர் தான் முக்கியம் என்ற பிரதமர், கொரோனாவின் அசுரப் பரவலை தடுக்க வேறு வழியின்றி இந்த கடுமையான நடவடிக்கை என்று நாட்டு மக்களிடம் தெரிவித்தார்.
இந்த ஊரடங்கால் கடந்த 9 நாட்களாக நாடு முடங்கியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவலின் தாக்கமோ மேலும் அதிகரித்தே வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்த நிலையில், உயிரிழப்பும் 62 ஆக அதிகரித்துள்ளது. அதுவும் கடந்த 4 தினங்களில் மட்டும் பாதிப்பு இரு மடங்காகி உள்ளது. இந்நிலையில் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கை கடுமையாக அமல்படுத்துமாறு மாநில முதல்வர்களை வலியுறுத்திய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், 3-வது முறையாக நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி மீண்டும் உரை நிகழ்த்த உள்ளார். இத்தகவலை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதுடன், தனது உரையின் போது ஒரு வீடியோ மூலம் சில தகவல்களை மக்களிடம் பகிரவுள்ளதாக சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இதனால் நாளை பிரதமர் நிகழ்த்தப் போகும் உரையில் இடம் பெறப்போகும் முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






