“கொரோனாவுக்கு அரச குடும்பத்தில் முதல் பலி!!” ஸ்பெயின் நாட்டு இளவரசியை காவு வாங்கியது!!
ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா கொரோனா வைரசின் பாதிப்பால் உயிரிழந்தார். அரச குடும்பத்தில் கொரோனா வைரசின் தாக்குதலுக்கு பலியான முதல் நபர் இவர்தான் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் கோரப்பசிக்கு அரச குடும்பத்தினரும், உலகத் தலைவர்களும், விதிவிலக்கில்லை என்றாகிவிட்டது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்நாட்டு சுகாதார அமைச்சர், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், கனடா பிரதமர் மனைவி சோபியா, ஈரான் நாட்டு அமைச்சர்கள் இருவர் என விஐபிக்கள் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
இது போல், பிரிட்டன் இளவரசர் சார்லஸ், மொனாக்கோ நாட்டு இளவரசர் ஆல்பர்ட், ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியாதெரசா ஆகியோருக்கும் கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி கொரோனா வைரஸ் தொற்று உலகின் பிரபலங்கள் பலருக்கும் பரவியுள்ளது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா இன்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.அரச குடும்பத்தில் கொரோனா வைரசுக்கு பலியான முதல் நபர் மரியா தெரசா என்பது குறிப்பிடத்தக்கது. 77 வயதான ஸ்பெயின் இளவரசியின் மரணம் உலகத் தலைவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
இந்த கொடிய வைரஸ் தாக்குதலில், இத்தாலிக்கு அடுத்து அதிக உயிரிழப்புகளை ஸ்பெயின் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், ஸ்பெயினில் 5982 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 72 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.







