--- --:--:-- --

ஊரடங்கு உத்தரவு : கடைகளுக்கு இன்று முதல் நேரக் கட்டுப்பாடு..! இறைச்சி,மீன், கோழி வாங்க குவிந்த கூட்டம்..! விலை தான் ஜாஸ்தி!!

unnamed

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து 5 நாட்களை கடந்த நிலையில், இன்று முதல் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மீன், இறைச்சி, கோழிக்கறி வாங்க மக்கள் கூட்டம் அதிகமானதால், விலையும் எகிறியது.

 

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்காக அதிகரித்து வருகிறது. இன்று வரை பலி எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் மட்டும் உயிரிழப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

 

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் பீதியை கிளப்பி வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 1016 ஆக உயர்ந்து, பலி எண்ணிக்கையும் மெதுவாக அதிகரித்து 25 ஆக உயர்ந்துள்ளது. பிற நாடுகளைப் போல், இந்தியாவில் சமூகத் தொற்றாக கொரோனா வைரஸ் பரவினால் பெரும் விபரீத எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் முன்னைச்சரிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டு, 130 கோடி மக்களும் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் அத்தியாவசியப் பொருட்களை மக்கள் வாங்க அல்லல்படும் சூழல் உருவானது. மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் அலை பாய்வதால் பொதுவெளியில் கூட்டம் திரள்கிறது. இதைத் தடுக்க தமிழகத்தில் அத்தியாவசிய பொருள் கடைகள் திறப்பில் நேரக் கட்டுப்பாட்டுடன் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

 

அதன்படி, மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணிமுதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும். ஆனாலும் அரசு வாகனங்கள், அவசர பணி ஊர்திகள் போன்றவற்றுக்கு தனியாக பெட்ரோல் பங்குகள் முழு நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மருந்து கடைகள், உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க முழுநாளும் செயல்பட தடையில்லை. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்க ஸ்விகி, ஸோமோட்டோ, ஊபர் ஈட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும், நேரக் கட்டுப்பாடுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இப்படி இன்று முதல் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு அமலுக்கு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று காலையில் இறைச்சி, மீன், கோழிக்கறி போன்ற அசைவ உணவுப் பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வழக்கத்தை விட விலையும் எகிறி இருந்தது. 600 ரூபாய் வரை விற்ற ஆட்டு இறைச்சி ரூ 750 முதல் 800 வரையும், மீன்களின் விலையும் இரு மடங்காக விற்றது இதைவிட 10 நாட்களுக்கு முன்பு ரூ.50 ரூபாய்க்கு கூவிக்கூவி விற்றாலும் சீந்துவார் இன்றி இருந்த பிராய்லர் கோழி இறைச்சி இன்று ரூ150 முதல் 180 ரூபாய் வரை விலை எகிறியது. நாமக்கல்லிலேயே கோழி இறைச்சி ரூ 170-க்கு விற்கப்பட்டது.

 

இதற்கு காரணம், கொரோனா பீதியால் கோழி விற்பனை சரிந்து நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் கோழி உற்பத்தியை அடியோடு நிறுத்தியதே காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் கோழிக்கறி மற்றும் முட்டை விலை மேலும் மேலும் உயர்வதுடன் தட்டுப்பாடும் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

 

இப்படியாக இன்று இறைச்சி, மீன், கோழிக் கடைகளில் எக்கச்சக்கமாக கூட்டம் குவிந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளியை பெரும்பாலானோர் கடைப்பிடித்ததாகவே தெரியவில்லை. எத்தனை அறிவுரைகள் வழங்கினாலும் அதனை மக்கள் அலட்சியப்படுத்தி, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதிலேயே குறியாக இருந்ததை காண முடிந்தது.

 

இதே போன்று இன்று காய்கறி வாங்கவும் மக்கள் படையெடுத்தனர். ஆனால் பல நகரங்களிலும் காய்கறி மார்க்கெட்டுகள் விசாலமான பேருந்து நிலையம், சாலைகள் , விளையாட்டு மைதானங்களுக்கு இடம் மாற்றப்பட்டதால் ஜன நெரிசலின்றி காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon