“டெல்லியை காலி செய்யும் வெளி மாநில தொழிலாளர்கள்..!” லட்சக்கணக்கில் திரள்வதால் நெரிசலில் திக்குமுக்காடும் தலைநகர்!!
ஊரடங்கு உத்தரவு காரணமாக டெல்லியில் அன்றாட பிழைப்பு நடத்தும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு ஓட்டு மொத்தமாக படையெடுத்ததால், ஜன நெரிசலில் நாட்டின் தலைநகரே திக்குமுக்காடியுள்ளது.
ஒரு பக்கம் கொரோனா பீதி என்றால் மற்றொரு பக்கம் ஊரடங்கு உத்தரவால் பிழைப்புக்கு வழியில்லை என்ற பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளனர் பல லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் . டெல்லியில் அன்றாட வருமானம் பார்க்கும் கூலித் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரம் செய்வோர், கட்டிடத் தொழிலாளர்கள் என டெல்லியில் பிழைப்புக்காக அண்டை மாநிலங்களான உ.பி., பீகார், ராஜஸ்தான், ம.பி., என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பல லட்சம் பேர், ஒண்டுக் குடித்தனத்தில் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதில் பெரும்பான்மையினர் உ.பி.மாநிலத்தவர் தான்.
கடந்த 24-ந் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி,கொரோனா முன்னெச்சரிக்கையாக அன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். இதனால் ஒரே இரவில், டெல்லியில் வசிக்கும் அண்டை மாநிலங்களின் கூலித் தொழிலாளர்கள் நிலை கேள்விக்குறியானது. போக்குவரத்தும் அடியோடு முடங்கியது.
இதனால் சாலையோரங்களில் டென்ட் அடித்து பிழைப்பு நடத்தி வந்த அன்றாடங்காய்ச்சிகள் பலர் மூட்டை, முடிச்சுகளுடன் டெல்லியை விட்டு வெளியேறத் தொடங்கினர். பேருந்து வசதி இல்லாததால், அகதிகள் போல நடைப் பயணமாகவே சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். டெல்லியில் பிழைப்புக்கு வழியில்லை என்ற நிலையில் பரிதவித்துக் கிடந்த மற்றொரு தரப்பு தொழிலாளிகள் குடும்பத்திற்கு வாடகைக்கு வீடு கொடுத்திருந்த வீட்டு உரிமையாளர்களிடம் இருந்தும் காலி செய்யுமாறு நெருக்கடி வர ஆரம்பித்தது.
இதனால் கடந்த 2 நாட்களாக டெல்லியில் உள்ள அண்டை மாநிலத் தொழிலாள்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக வெளியேற ஆரம்பித்தனர். நீண்ட தூரம் நடந்து செல்ல முடியாது என்பதால் ஆனந்த விகார் பேருந்து நிலைய பகுதியில் திரள ஆரம்பித்தனர். இப்படி திரண்டவர்களின் கூட்டம் நேற்று காலை முதல் லட்சத்திற்கும் மேல் அதிகரிக்க, ஜன நெரிசலில் திணற ஆரம்பித்தது. பேருந்து வசதி செய்து தர வேண்டும் என போராட்டத்திற்கும் ஆயத்தமானார்கள். இதனால் தலைநகரில் அசாதாரண சூழல் உருவானது.

கொரோனா பரவாமல் தடுக்க, சமூக இடைவெளி அவசியம்;மக்கள் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் அலட் சியப்படுத்தி தலைநகரில், ஏழைத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் திரண்டதும் மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் பெரும் நெருக்கடியாகி விட்டது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், வெளி மாநிலவாசிகள் யாரும் வெளியேற வேண்டாம்; தங்குமிடம் மற்றும் உணவுக்கு உத்தரவாதம் அளிப்பதாக கெஞ்சலாக வேண்டுகோள் விடுத்தும் யாரும் காது கொடுத்து கேட்பதாக இல்லை.
நேரம் செல்லச் செல்ல, கும்பல் கும்பலாக குடும்பத்துடன் தொழிலாளர்கள் குவிந்ததால் வேறு வழியின்றி, பேருந்து வசதி செய்து அனைவரையும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறு உ.பி.அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. உடனடியாக நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று காலையிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும் கூட்டம் குறைந்தபாடில்லை. சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிப்பதால், தலைநகர் டெல்லி திக்குமுக்காடிப் போய் காணப்படுகிறது.







