--- --:--:-- --

“ஏய் சிங்கம் போல நடந்து வாரான் செல்லப் பேரான்டி!!” பாடல் புகழ் பறவை முனியம்மா காலமானார்!!

IMG-20200329-WA0022

பிரபல நாட்டுப்புற பாடல் கலைஞரும், தூள் படத்தில் சிங்கம் போல நடந்துவாரான் என்ற பாடலை பாடி தூள் கிளப்பிய நடிகையுமான பரவை முனியம்மா உடல் நலக் கோளாறு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.

 

மதுரையை அடுத்த பரவை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள். கிராமிய கலை நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்தியதால் இவருடைய பெயருடன் ஊர்ப் பெயரும் சேர்ந்து பரவை முனியம்மா என்று அழைக்கப்பட்டார். இவருடைய கிராமிய பாடல்கள் புகழ் பெற்றதால் தமிழ் சினிமர உலகமும் இவருக்கு கைகொடுத்தது.

 

முதன் முதலில் விக்ரம் நடிப்பில் உருவான “தூள்” படத்தில் அறிமுகமான பரவை முனியம்மா, “சிங்கம் போல நடந்து வாரான் செல்லப் பேரான்டி” என்ற பாடலைப் பாடி,துள்ளாட்டம் போட்டு தூள் கிளப்பி முதல் படத்திலேயே பிரபலமானார். அதன் பின் வரிசையாக படங்கள் குவிந்து பிரபல தமிழ் நடிகர்கள் பெரும்பாலானோருடன் நடித்தவர்.

 

மொத்தம் 84 படங்களில் நடித்துள்ள பரவை முனியம்மா தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். கடந்த 2014-ல் சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் சொந்த ஊரான மதுரை பரவையில் வசித்து
வந்தார்.

 

சினிமாவில் நடித்து புகழ் பெற்றாலும், பணம், பொருள் சேர்க்க தவறிவிட்ட பரவை முனியம்மா வயதான காலத்தில் வறுமையில் சிக்கித் தவித்தார். அவருக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் திரையுலகினர் பலரும் நிதி உதவி செய்தனர்.

 

கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் குன்றியிருந்த பரவை முனியம்மா, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த சில மாதங்களாக அவர் உடல் நிலை மோசமாகி வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. 77 வயதான பரவை முனியம்மாவின் மறைவுக்கு திரை உலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon