ஊரடங்கு உத்தரவு எதிரொலி : ஏழைகள், தொழிலாளர்களுக்கு உதவ மத்திய அரசு ரூ.1.75 லட்சம் ஒதுக்கீடு!!
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், முறைசாரா தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கு ரூ.1.75 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மல சீத்தாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த தேசத்தின் இயக்கமே நின்றது போல் அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன.இந்த ஊரடங்கால், தினசரி வருவாய் ஈட்டுகள் கூலித் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், முறைசாரா தொழிலாளர்கள் முதல் சிறு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலை பாதுகாப்பு இன்றி மாத ஊதியம் பெறுவோர் வரை அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது.
இப்படி பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கையோ நாட்டின் ஜனத்தொகையில் மூன்றில் 2 பங்குக்கும் அதிகம் எனக் கூறப்படும் நிலையில், அரசு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் நாடு முழுவதும் எழுந்தன. ஊரடங்கு என்ற பெயரில் வெறுமனே மக்களை முடக்கினால் மட்டும் போதாது; அவர்களின் தினசரி சமாளிப்புக்கான தீர்வையும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்; இல்லையெனில் பசி, பட்டினி கொடுமை என்பது கொரோனாவின் பாதிப்பை விட அதிகமாகி விடும் எனவும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாள்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டு மக்களை பசி, பட்டினியால் தவிக்க விடமாட்டோம். இந்த ஊரடங்கால் ஏற்பட்டுள்ள அவர்களின் பாதிப்பைப் போக்க ரூ.1.75 லட்சம் கோடியில் பல்வேறு உதவிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்படி நிர்மலா சீத்தாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
ஊரடங்கால் யாரையில் பசிக் கொடுமை நிலைக்கு தள்ளப் போவதில்லை. ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.75 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு .80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை அடுத்த மூன்று மாதங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும்.
வீடுகள் தோறும் மூன்று மாதங்களுக்கு தலா 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக 2,000 ரூபாய் வழங்கப்படும். ஊதியமும் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக அதிகரிக்கப்படும்
முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். சுமார் 8 கோடி விவசாயிகளுக்கு முதற்கட்டமாக ரூ. 2000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு தலா 500 ரூபாய் 3 மாதங்களுக்கு வழங்கப்படும். அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் தோறும் செலுத்தப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதம் இல்லாத கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
தொழிலாளர் மற்றும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பிஎஃப் தொகையை அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசே செலுத்தும்.மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.






