இயக்குநர் ஷங்கரிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை
கிரேன் அறுந்து விழுந்தது விபத்து தொடர்பாக இந்த படப்பிடிப்பு தளத்தில் மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட ஆய்விற்கு பின் விபத்து நேர்ந்த படப்பிடிப்பு தளத்தில் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 24 பேர் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமலஹாசன் ஆஜராக தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் கமலஹாசனை தவிர எஞ்சிய 23 பேரும் படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகினர். காலை 11 மணியளவில் விசாரணையை தொடங்கிய அதிகாரிகள் ஒளிப்பதிவாளர்கள், கிரேன் ஆபரேட்டர், தயாரிப்பு மேலாளர் ஆகியோரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இரண்டு மணி நேர விசாரணைக்குப் பின் இயக்குனர் ஷங்கர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. விசாரணை முழுவதையும் வீடியோவாக பதிவு செய்யும் அதிகாரிகள் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
19ஆம் தேதி பூந்தமல்லி அருகே நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின்போது கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.






