--- --:--:-- --

“ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்!” தகுதி நீக்க விவகாரத்தில் 3 ஆண்டுக்குப் பின் சபாநாயகர் நடவடிக்கை!!

Dhanapal

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் விவகாரத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டது. 2017 பிப்ரவரி 18-ல் எடப்பாடி பழனிசாமி முதல்வரானபோது சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ் உள்ளிட்ட அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் 11 பேர் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் இவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் திமுக கொறடா சக்ரபாணி மனு கொடுத்தார். ஆனால் சபாநாயகர் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

 

இந்த வழக்கில் கடந்த 2018-ல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அவருக்கு எந்த உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்திலும் இந்த வழக்கு ஒரு ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் இருந்தது. திடீரென இந்த மனு மீது கடந்த மாதம் விசாரணை நடைபெற்றது. அதில், 3 ஆண்டுகள் ஆகியும் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. ஆனாலும் சபாநாயகருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது; அவருடைய அதிகாரத்திலும் தலையிட முடியாது என்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உரிய நடவடிக்கையை சபாநாயகர் எடுப்பார் என்று நம்புவதாகக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் ப.தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மான்யக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஒரு மாதம் நடைபெற உள்ள நிலையில், சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon