“ஒரு விஷயத்தில இன்னும் ஏமாற்றம் தான்.. திருப்தியில்லை..!” சஸ்பென்ஸ் வைத்த ரஜினி!!
புதிய கட்சி தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து தனது மன்ற நிர்வாகிளெுடன் விவாதித்ததாகவும், ஆனால் ஒரு விஷயத்தில் இன்னும் திருப்தியில்லை; ஏமாற்றமாகத் தான் உள்ளது, அது பற்றி பின்னர் காலம் வரும் போது சொல்கிறேன் என ரஜினி சஸ்பென் சாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தனது மக்கள் மன்ற மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் ரஜினி முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனால் கட்சி தொடங்குவது பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. 36 மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ரஜினி ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். 12 மணிக்கு கூட்டம் முடிந்தவுடன் ரஜினி காரில் ஏறி வீட்டுக்கு பறந்து விட்டார். இதனால் கூட்டத்தில் ரஜினி என்ன பேசினார். என்ன முடிவெடுக்கப்பட்டது என தெரியாமல் வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஆனால், கூட்டம் முடிந்து போயஸ் கார்டன் இல்லம் திரும்பிய ரஜினி சிறிது நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது பற்றி ரஜினி விளக்கி கூறியதாவது: கூட்டத்தில் நிறைய விஷயங்கள் குறித்து அலசினோம். புதிய கட்சி அறிவிப்பது குறித்து மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்தேன். அவர்களிடமும் நிறைய கேள்விகளும், சந்தேகங்களும் இருந்தன. அதற்கெல்லாம் பதிலளித்தேன். அதில் அவர்கள் திருப்தியடைந்தனர்.
ஆனால் எனக்குத் தான் ஒரு விஷயத்தில் இன்னும் திருப்தியில்லை; ஏமாற்றமாகத் தான் உள்ளது. அது என்ன என்பதை இப்போது சொல்ல மாட்டேன். நேரம் வரும் போது சொல்கிறேன். உள்ளே பேசிய விஷயத்தையெல்லாம் இப்போது சொல்லவும் முடியாது என்று ரஜினி தெரிவித்தார். என்ன திருப்தியில்லை.. எதில் ஏமாற்றம் என்பதை வெளிப்படுத்தாமல் ரஜினி சஸ்பென்ஸ் வைத்துள்ளது தமிழக அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளது. அதே வேளையில் இப்படி சொல்லியே கட்சி தொடங்காமல் வழக்கம் போல காலம் கடத்தப் பார்க்கிறாரா ரஜினி? என்ற யூகங்களும் எழுந்துள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




