20 மாடுகளை பிடித்த அலங்காநல்லுரை சேர்ந்த அஜய் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு! கார் பரிசாக வழங்கப்பட்டது !!!
கோவை செட்டிப்பாளையத்தில் இன்று காலையில் இருந்து ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது.
விழாவினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஜல்லிக்கட்டில் 900 காளைகளும்,750 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு காளைகளை அடக்கி தங்களது வீரத்தை பறை சாட்டினர்.
இந்த ஜல்லிக்கட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோரின் காளைகளும் வீராவேசத்துடன் பாய்ந்து சென்று அசத்தின.

சீறிப்பாய்ந்த காளைகளில் 20 மாடுகளை பிடித்த அலங்காநல்லுரை சேர்ந்த அஜய் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார்.இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.மேலும்,தனியார் நிறுவனம் ஒன்று இலவச வீட்டு மனை வழங்கியது. இரண்டாவது பரிசாக 17 மாடுகளை பிடித்த திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திக், மூன்றாவது பரிசாக கார்த்திக்கிற்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.10 மாடுகளுக்கு மேல் பிடித்தவர்களுக்கு 3 செண்ட் நிலம் வழங்கப்பட்டது.
சிறந்த மாடாக முதல் பரிசை ராஜசேகர் என்பவரது மாட்டிற்கும், இரண்டாவது பரிசாக ஆண்டிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அய்யனார்குளம் மாட்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

விழாவினை இலட்சக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.சில காளைகளை மாடு பிடி வீரர்கள் அடக்கும் பொழுது பார்வையாளர்கள் விசில் அடித்தும், கை தட்டியும் வீரர்களை உற்சாகப்படுத்தினர். அப்பொழுது, பார்வையாளர்கள் உற்சாகத்தில் எழுப்பிய கரகோஷம் விண்ணை பிளந்தது.
இந்நிகழ்வில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,எம்.பி ஏ.கே செல்வராஜ்,எம்.எல்.ஏ – க்கள் அம்மன் அர்ச்சுனன்,எட்டிமடை சண்முகம், ஓ.கே.சின்னராஜ்,மாவட்ட ஆட்சியர் ராசாமணி,ஜல்லிக்கட்டு சங்கத்தின் தலைவர் அன்பரசன்,செயலாளர் தங்கவேலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




