கோவையில் துவங்கியது விறுவிறு ஜல்லிக்கட்டு.! சீறி வரும் காளைகளை அடக்க இளம் காளையர்கள் மல்லுக்கட்டு!!!
கோவையில் 3-ம் ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க, 700-க்கும் மேற்பட்ட இளம் காளைகளும் 600-க்கும் மேற்பட்ட காளையர்களும் மல்லுக்கட்டும் போட்டியை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கண்டு களித்து வருகின்றனர்.
2017-ம் ஆண்டில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை வந்தது. மிருக நல வாரியத்தின் மூலமாக உச்ச நீதிமன்றம் விதித்த தடையால் தமிழகமே கொந்தளித்தது. ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க உணர்ச்சிமிகு எழுச்சிப் போராட்டங்கள் மூலம் தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் குரல் கொடுத்தனர். இதனால் ஜல்லிக்கட்டுக்கான தடைகள் தகர்க்கப்பட்டன. தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மீது இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்தது.
இதனால் தென்மாவட்டங்களில் மட்டுமே பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தமிழகத்தின் எஞ்சிய பகுதிகளிலும் நடத்த முடிவு செய்யப்பட்டு, குறிப்பாக கொங்கு மண்டலத்தில் திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் ஆண்டுதோறும் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கோவையில் கடந்த இரு ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கமும் இணைந்து ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் இன்று ஜல்லிக்கட்டு துவங்கியது. இதில் 900 காளைகளும், அவற்றை வீராவேசத்துடன் அடக்க 750 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
முதலில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பிறகு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஜல்லிக்கட்டினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர், அமைச்சர் முன்னிலையில் வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து களத்தில் வீராவேசமாக பாய்ந்த காளைகளை, காளையர்கள் அடக்கி ரொக்கம் மற்றும் தங்க காசுகளை வென்று வருகின்றனர்.இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,மாவட்ட ஆட்சியர் ராசாமணி,எம்.பி ஏ.கே.செல்வராஜ்,எம்.எல்.ஏ க்கள் ஓ.கே.சின்னராஜ்,அம்மன் அர்ச்சுனன்,பி.ஆர்.ஜி.அருண் குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கண்டுகளித்தனர்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காயமடையும் வீரர்களுக்கு சிறப்பான மருத்துவ வசதியும்,டி.ஐ.ஜி பெரியய்யா தலைமையில் ஆயிரக்கணக்கான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி,அசத்திய காளையர்களை காண பார்வையாளர்கள் லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




