இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு…! பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!!
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.
இலங்கை பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். 4 நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள ராஜபக்சேவுக்கு இந்திய அரசு சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பு மரியாதையுடன், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அணிவகுப்பு மரியாதையை ஏற்றபின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை பிரதமர் ராஜபக்சேவை உபசரித்தார். பின்னர் இருவரும் இரு நாடுகளின் இடையேயான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தினர். இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை ராஜபக்சே சந்தித்தார். தொடர்ந்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இலங்கையில் 2 ள்ள தமிழர்களுக்கு சம உரிமை, சமநீதி கிடைக்க உறுதி செய்யுமாறு ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப் பின் மோடியும், ராஜபக்சேவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் . அப்போது பிரதமர் மோடி கூறுகையில், தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவும், இலங்கையும் நெருங்கிய நட்பு நாடுகள் . இந்த பிராந்தியத்தில் தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது தீவிரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் இணைந்து தொடர்ந்து பாடுபடுவோம். இரு நாடுகளிடையே வர்த்தகம், முதலீடுகளை அதிகரிப்பது, சுற்றுலாவை மேம்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் விவாதித்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.






