“கொனோரா மட்டுமில்ல.. எந்த வைரஸும் தமிழகத்தை அண்டவே முடியாது..!” அமைச்சர் செல்லூர் ராஜு ஜோசியம்!!
அதிமுக ஆட்சியில், சுகாதாரத் துறை சுறுசுறுப்பாக செயல்படுவதால், கொரோனா வைரஸ் மட்டுமல்ல, எந்த வைரஸும் தமிழகத்தில் தாக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு ஜோஸ்யம் கூறுவது போல் தெரிவித்துள்ளது கிண்டலாகியுள்ளது.
மதுரையில் தண்ணீர் பஞ்சம் வந்த போது, வைகை அணையில் நீர் ஆவியாகி வீணாகக் கூடாது என துண்டு, துண்டான தெர்மா கோல் சீட்டுகளை போட்டு அணை நீரை மூடப் பார்த்தவர்தான் அமைச்சர் செல்லூர் ராஜு. இவரின் இந்த எக்குத்தப்பான இந்த ஐடியாவால் சர்வதேச அளவுக்கு அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. அது முதலே அவருக்கு தெர்மா கோல் விஞ்ஞானி என்ற பட்டப்பெயரை சூட்டி, வடிவேலுவை மிஞ்சும் அளவுக்கு மீம்ஸ்களை தட்டி விட்டு நெட்டிசன்கள் காமெடி ஆக்டராக சித்தரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான், சீனாவில் பரவும் கொனோரா வைரஸ் பீதியில் உலகமே உறைந்து கிடக்க, தமிழகத்தை எந்த வைரஸும் தாக்க முடியாது என ஜோஸ்யர் போல எதுகை மோனையாக கருத்துக் கூறி மீண்டும் ஒரு சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார். மதுரையில் சுகாதாரத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது இதுதான் : தமிழகத்தில் அதிமுக அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திறமையாக ஆட்சி நடத்தி வருவதால் சுகாதாரத் துறையும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸானாலும் சரி, வேறு எந்த வைரஸும் எட்டிப் பார்க்கவே முடியாது, வரவும் விட மாட்டோம் என்று ஜோஸ்யர் போல ஆரூடம் கூறினார். உலகமே கொனோரா வைரஸ் பீதியில் நடுநடுங்கிக் கொண்டிருக்க, அசால்ட்டாக, தமிழகத்துக்குள் வைரஸ் வரமுடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




