--- --:--:-- --

சீனாவிலிருந்து சென்னை வருவோரிடம் கொரனா பரிசோதனை நடவடிக்கை தீவிரம்

6

இந்தியாவில் கொரனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து சேரும் அனைத்து பயணிகளுக்கும் ரத்த பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேரும் பயணிகள் மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

 

முதலாவது கொரனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நகரில் இருந்து வந்து சேர்வோரிடம் உடனடியாக இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள கிங்ஸ் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் 28 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.

 

நோய் பாதிப்பிற்கான அடையாளங்கள் தெரிந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். சீனாவில் மற்ற பகுதிகளிலிருந்து வருவோர் 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

 

தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து வருவோருக்கு நோய் அறிகுறிகள் இருக்கின்றனவா என சோதிக்கப்படும். அறிகுறிகள் தென்படுவோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுவார்கள். இதுவரை இரத்த மாதிரிகள் சோதனைக்காக புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் சோதனைகள் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு நெருக்கத்தில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon