--- --:--:-- --

“திமுகவை விமர்சிக்க, பெரியாரை காட்டி பூச்சாண்டி காட்ட வேண்டாம்” ரஜினியை சரமாரியாக சாடிய முரசொலி!!

rg

திமுகவை விமர்சிக்க, பெரியாரை காட்டி பூச்சாண்டி காட்ட வேண்டாம் என ரஜினியை சரமாரியாக சாடியுள்ளது முரசொலி நாளிதழ் . மேலும் ரஜினியின் உண்மையான நோக்கம் ராமரை காப்பாற்றுவதா? அல்லது திமுகவை எதிர்ப்பதா? என்றும் முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

 

துக்ளக் விழாவில், 1971-ல் நடைபெற்ற தி.க.மாநாடு தொடர்பாக ரஜினி பேசியது, தமிழகத்தில் பெரும் சர்ச்சையாகிக் கிடக்கிறது. பாஜக, இந்து அமைப்புகள் தவிர்த்து, தமிழகத்தில் உள்ள ஆளும் அதிமுக உள்பட ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ரஜினிக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

 

இதில் திமுக தரப்பில் ரஜினிக்கு கடும் கண்டனங்கள் எழவில்லை என்ற ரீதியில் ஒரு தரப்பில் புகார் வாசிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழில் ரஜினியை கடுமையாக சாடி கட்டுரை வெளியாகியுள்ளது. அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

 

துக்ளக் விழாவில் சோவை பெருமைப்படுத்துவதாக நினைத்து பெரியாரை சிறுமைப்படுத்தியுள்ளார் ரஜினி. ரஜினியின் பேச்சு விமர்சனமாகக் கூட இல்லை. வரலாற்றுப் பிழைகள் கொண்ட அவதூறாக இருந்தது. உண்மை வரலாறு அறியாமல் பேசியதால் ரஜினி மீது தமிழ் பொதுவெளியில் விமர்சனங்கள் வருகின்றன. ரஜினி கூறிய குற்றச்சாட்டுக்கு திராவிடர் கழகம் மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளது.

ராமர்,சீதை படங்கள் நிர்வாணமாக எடுத்து வரப்படவில்லை என திராவிடர் கழகம் விளக்கியுள்ளது. திமுக, காங்கிரசை ஆதரித்த போதும் சரி, எதிர்த்த போதும் சரி ராமாயணத்தை எதிர்த்தவர் பெரியார். 1929-ல் பெரியார் தொடங்கிய ராமாயண எதிர்ப்பை பூதாகரமாக்கி திமுகவை தாக்குகிறார்கள். இவர்களின் உண்மையான நோக்கம் ராமரை காப்பாற்றுவதா? அல்லது திமுகவை எதிர்ப்பதா?

 

1971 தி.க பேரணியில் மனம் புண்படும் வாசகங்கள், படங்களை நீக்க திமுக அரசு உத்தரவிட்டது. காவல் துறையினரும் அறிவுறுத்தப்பட்டனர். இதனால் பெரியாரே திமுக அரசு குறித்து அறிக்கை விட்டார். அரசு அவர்கள் கடமையை செய்யட்டும். நாம் நமது கடமையை செய்வோம் என்று கூறியவர் பெரியார். அரசின் கடமையிலிருந்து கருணாநிதி தவறவில்லை. பெரியார் அவரது கொள்கையை விட்டும் தரவில்லை .

 

எனவே,அரசியல் அரிச்சுவடி தெரியாமல் திமுகவை விமர்சிப்பது விஷமத்தனமானது. திமுகவை விமர்சிக்க பெரியாரை காட்டி பூச்சாண்டி காட்ட வேண்டாம் என ரஜினியை கடுமையாக சாடியுள்ளது முரசொலி நாளிதழ் .

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon