நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்..! மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு!!
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடந்து, முடிவுகளும் வெளியாகி விட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் செய்து, ஆளும் கட்சிக்கு சாதகமாக மாநில தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாக திமுக சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கையிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக பல தரப்பிலும் புகார்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் எந்த முறைகேடுகளும் இன்றி 100% நேர்மையாக நடத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்பதை ஏற்க முடியாது என்றும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலைத்தான் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
27 மாவட்டங்களில் ஊரகப் பகுதி உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகள் முடிந்துள்ளது. வெற்றி பெற்றவர்கள் வரும் 6-ந் தேதி பதவியேற்பார்கள். மேலும் தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் முடிவுக்கு வருவதாகவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.





