புத்தாண்டு கொண்டாட்டம் : ‘குடி’மகன்களிடம் ஒரே நாளில் ரூ.250 கோடியை ‘கறக்க’ டாஸ்மாக் இலக்கு!!
2020-ம் ஆண்டை வரவேற்க புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கியுள்ள நிலையில், ‘குடி’மகன்களிடம் ஒரே நாளில் ரூ.250 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மது.. மது.. மது.. பல ஆண்டுகளில் இதன் பிடியில் சிக்கித் தமிழகமே தள்ளாட்டம் போடுகிறது என்றால் மிகையாகாது. முன்னரெல்லாம் வசதி படைத்தவர்களின் உற்சாக பானமாக இருந்த மதுபானம், அரசின் நேரடி விற்பனையில் தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் முளைக்க, டீ குடிப்பது போல சாமான்யனின் தினசரி பானமாகி விட்டது. அந்த அளவுக்கு 3 தலைமுறையினர் குடிக்கு அடிமையாகி விட்டனர் என்றே கூறலாம்.
நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும், பெரும்பாலானோர் நாடும் பானமாகி விட்டது இந்த மது. இதனால் ஆண்டுதோறும் டாஸ்மாக் விற்பனை எகிறி வருகிறது. அரசின் பெரும்பாலான திட்டங்களை செயல்படுத்த, டாஸ்மாக் வருமானம் தான் கை கொடுக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளலாம்.
இதில், மது வருவாயைப் பெருக்க டாஸ்மாக் நிர்வாகம் இலக்கும் நிர்ணயித்து செயல்படுவது தான் கொடுமை. அதுவும் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற கொண்டாட்ட தினங்களுக்கு கூடுதல் தொகையை இலக்காக நிர்ணயித்து, அந்த இலக்கை தாண்டி விட்டதாக, எத்தனை பெட்டி பிராந்தி, பீர் விற்றது, எவ்வளவு வசூல் என புள்ளி விபரத்துடன் பெருமையாக தெரிவிக்கவும் தவறுவதில்லை.
இந்நிலையில், 2020-ம் ஆண்டை வரவேற்கவும், உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபடவும் இளைஞர்கள் முதல் பல தரப்பினரும் தயாராகி வருகின்றனர்.புத்தாண்டு கொண்டாட்டு கொண்டாட்டம் என்றால் அதில் பிரதானமே சரக்கு பாட்டில்தான். இன்று இன்று மாலை முதலே டாஸ்மாக் சரக்கு விற்பனை களை கட்டி விடும் என்ற நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் ரூ.250 கோடி அளவுக்கு மதுபான விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்து, போதுமான அளவுக்கு கடைகளில் இருப்பு வைக்கவும் உத்தரவிட்டுள்ளதாம். கடந்தாண்டு புத்தாண்டுக்கு ரூ.200 கோடிக்கு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 50 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து, குடிமகன்களிடம் பணத்தை கறக்க டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




