இப்போ தமிழ்நாட்டில் இதுதான் புது டிரெண்ட் ..!! எல்லாரும் ‘கோலம்’ போட ஆரம்பிச்சுட்டாங்க..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக விதவிதமான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இப்போது கோலம் போடுவது டிரெண்ட் ஆகிவிட்டது. இதுவரை கோலமே கண்டிராத பல தலைவர்களின் வீடுகள், அலுவலகங்கள் முன், குடியுரிமை சட்ட எதிர்ப்பு வாசகங்களுடன் வண்ண வண்ண கோலங்கள் பளிச்சிடுகின்றன.

 

மார்கழி மாதம் என்றாலே, மாதம் முழுவதும், அதிகாலை பனிப்பொழுதில் வீட்டு வாசல்களில் வண்ண வண்ணமாக விதவிதமாக கோலங்கள் இடுவது தமிழர்களின் கலாச்சாரத்தில் ஊறிப்போன ஒன்று. எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு, கோலம் போடுவது போராட்ட வடிவில் திடீரென பிரபலமாகி விட்டது. இதற்கு காரணம் நம்ம ஆட்சியாளர்களும், போலீசும் தான் என்றே கூறலாம். 2 நாட்கள் முன்பு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த 6 பெண்களை போலீசார் கைது செய்தது தான் ரொம்பவே பிரபலமாகி விட்டது. கோலம் போட்டால் கூடவா கைது செய்வீர்கள்? என்று அரசுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன. கோலம் போட்டது தவறில்லை. அதில் இடம்பெற்ற வாசகங்கள் தான் அலங்கோலம் என்று அமைச்சர்கள் சிலர் சப்பைக்கட்டு கட்டினார்கள். இருந்தாலும், எதிர்ப்புகள் வலுக்கவே கைது செய்யப்பட்ட பெண்களை உடனே விடுவித்து விட்டார்கள்.

கோலம் போட்ட பெண்கள் கைது விவகாரம் ரொம்பவே பாப்புலராக, இப்போது குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்ட வடிவம் ‘கோலம்’ வடிவில் தமிழகம் முழுவதும் போர்க் “கோலம்” கண்டு டிரெண்ட் ஆகிவிட்டது. எங்கே? எங்களையும் கைது செய்யுங்கள் பார்ப்போம்? என்று சவால் விடுவது போல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் No CAA, No NCR, No NPR என்ற வாசகங்களுடன் விதவிதமாக கோலமிட ஆரம்பித்து விட்டனர். இதில் இதுவரை கோலமே கண்டிராத திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் கோபாலபுரம் வீடு, மு.க.ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லம், கனிமொழியின் சிஐடி காலனி வீடு என திமுக புள்ளிகளின் வீடுகள் பலவும், குடியுரிமை சட்ட எதிர்ப்பு வாசகங்களுடன் புள்ளிக்கோலங்கள் பளிச்சிட்டன. இதைக் கண்டு ஏராளமானோர் வீடுகளில் இதே போன்று கோலமிட ஆரம்பித்து விட்டனர்.

இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலும், மகளிர் காங்கிரசார் திரண்டு கோலங்களை போட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் முன் அக் கட்சித் தலைவர் திருமாவளவன், ரசித்து, ரசித்து மிகப் பெரிய வண்ணக் கோலம் போட்டதை மீடியாக்கள் போட்டி, போட்டு நேரலையில் ஒளிபரப்பினர்.

 

இப்படி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எதிர்க் கட்சிகள் கோலம் போட, போட்டிக்கு பாஜகவினர் ஆதரவு வாசகங்களுடன் கோலமிட தமிழகம் முழுவதும் இப்போது கோலம் தான் டிரெண்ட் ஆகியுள்ளது.


Leave a Reply