பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மேலப்பாளையத்தில் நடந்த இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக் மற்றும் பிரபல பட்டிமன்ற பேச்சாளராக நெல்லை கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் பேசியபோது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்ய தூண்டும் விதமாக அவர்கள் பேசியதாக அவர்கள் மீது காவல்நிலையத்தில் 504, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் காலை நெல்லை கண்ணன் வீட்டின் முன்பாக பாஜகவை சேர்ந்த 20 பேர் அவர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டமானது அரை மணி நேரம் நடைபெற்றது. காவல்துறையின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்களுடைய கூட்டம் கலைக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து நெல்லை மாநகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில், 1.45 மணிக்கு அவர் வீட்டில் இருந்து காரில் வெளியே புறப்பட முயன்ற காவல்துறை காரில் செல்ல அனுமதி மறுத்திருந்த நிலையில் உடல்நிலை சரியில்லை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென காவல்துறையிடம் தெரிவித்து உடனடியாக எஸ்டிபிஐ மூலம் ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டது.
அந்த ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் நெல்லைகண்ணன் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.