திருமணம் ஆன 20-வது நாளில், புதுமணப் பெண் காதலனுடன் ஓட்டம்
கன்னியாகுமரி அருகே திருமணமான இருபதே நாட்களில் வருவாய் ஆய்வாளரை விட்டு காதலனுடன் இளம் பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் இவருக்கும், ராஜஸ்ரீ என்பவருக்கும் கடந்த மாதம் 24ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
புதுமண தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி வேல்முருகன் அலுவலகத்திற்கு சென்ற பின் ராஜஸ்ரீ மாயமாகியுள்ளார். பணி முடிந்து வீட்டிற்கு வந்த வேல்முருகன் மனைவி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மனைவியின் பெற்றோரை தொடர்புகொண்டு பேசியதில் ராஜஸ்ரீ அங்கும் செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும் தாய் வீட்டில் கொடுத்த 70 சவரன் நகையுடன் ராஜஸ்ரீ மாயமானது தெரிய வந்ததால் வேல்முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ராஜஸ்ரீ பள்ளி பருவத்திலிருந்தே பக்கத்து வீட்டை சேர்ந்த சந்தோஷ் என்பவரை காதலித்து வந்ததும், திருமணமான 20 நாளில் கணவனை விட்டு காதலனுடன் பெங்களூருக்கு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
ஆனால் வேலைக்கு செல்லாமல் பலரிடம் கடன் வாங்கியுள்ள சந்தோஷ் பணத்திற்காக தனது மகளை கடத்தி சென்றதாக அவரது தந்தை ராஜேந்திர பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். பல லட்சம் ரூபாய் கடனில் சிக்கியுள்ள சந்தோஷ் ஊரை விட்டு செல்வதற்கு முன்பு தனது மகளிடம் இருந்து சிறிது நகைகளை வாங்கி தனியார் வங்கியில் அடகு வைத்துள்ளதாகவும் , அதனை கண்டுபிடித்து தான் மீட்டதாகவும் ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். திருமணமான இருபதே நாட்களில் இளம்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





