--- --:--:-- --

“9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்தலாம்”- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

t

தமிழகத்தில் சமீபத்தில் மாவட்டங்கள் பிரிவினை செய்யப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

 

தமிழகத்தில் ஊரகப் பகுதி உள்ளாட்சிகளுக்கு வரும் 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்த திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் சட்டப்படி முறையாக தேர்தலை நடத்தக்கோரியும், தற்போது அறிவிக் கப்பட்டுள்ள தேர்தலை ரத்து செய்யக் கோரியும் திமுக தரப்பு மட்டுமின்றி12 பேர் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் நடந்த இந்த வழக்கு விசாரணையில், திமுக தரப்புக்கும், தமிழக அரசு தரப்புக்கும் இடையே வழக்கறிஞர்கள் காரசார விவாதம் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், தமிழக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சித்தவை. அத்துடன், 3 ஆண்டுகள் வரை காலம் கடத்திய நிலையில், இப்போது முறையாக தேர்தலை நடத்தாதது ஏன்? மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் வார்டுகள் மறு வரையறை செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். மேலும், தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிடப் போவதாகவும் அறிவித்தனர்.

 

இதனால் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என தமிழக அரசுத் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திமுக தரப்பிலோ, ஒட்டு மொத்தமாக தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நேற்று வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.

 

இதனால், ஏற்கனவே தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தேர்தல் நடக்குமா? தள்ளிப்போகுமா? என்ற சந்தேகம் நிலவிய நிலையில், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற இடங்களில் தேர்தலை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் வார்டு மறு வரையறை பணிகளை முடித்த பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்புகள் இன்று முதல் களை கட்டும் எனத் தெரிகிறது.

 

தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட 9 மாவட்டங்கள் விபரம்:

 

1. காஞ்சிபுரம்

 

2. செங்கல்பட்டு

 

3. வேலூர்

 

4. திருப்பத்தூர்

 

5. ராணிப்பேட்டை

 

6. விழுப்புரம்

 

7. கள்ளக்குறிச்சி

 

8. திருநெல்வேலி

 

9. தென்காசி

 

இந்த 9 மாவட்டங்கள் தவிர, எஞ்சிய மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில், ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு வரும் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று வேட்பு மனுத்தாக்கலும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon