--- --:--:-- --

காதலுக்காக தோழியை கொன்ற பெண் மற்றும் அவரது காதலர்!

5

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெண்ணை கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவனும், 16 வயது சிறுமியும் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு கிராமத்தை சேர்ந்த சுந்தரி என்பவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

 

சில தினங்களுக்கு முன்பு உறவுக்கார சிறுமி ஒருவருடன் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சுந்தரி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து அவருடன் உறங்கிய 16 வயது சிறுமியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

 

திண்டுக்கல்லில் படித்தபோது 17 வயது சிறுவன் ஒருவனும் சிறுமியும் காதலித்ததாக தெரிகிறது. திண்டுக்கல்லிலிருந்து பண்ணைகாட்டிற்கு சிறுமி வந்துவிட்டதால் சிறுவனை சந்திக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சிறுவனை சந்திக்க முடிவு செய்த சிறுமி அதற்காக தனது இல்லத்திலிருந்து சுந்தரி வீட்டிற்கு வந்து தங்கியதாக தெரிகிறது. அங்கு வந்த சிறுவன் சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்தபோது சுந்தரி பார்த்து விட்டதாக கூறப்படுகிறது.

 

மேலும் பெற்றோரிடம் கூற போகிறேன் என்று சுந்தரி கூறியதாகவும் அதனால் அச்சமடைந்த சிறுமியும், சிறுவனும் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் தெரிகிறது. சிறுமியை கைது செய்த காவல்துறையினர் அவரை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon