மனைவி, மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சி – முன்னாள் எம்.எல்.ஏ.க்கு 3 ஆண்டு சிறை!!
மனைவி மற்றும் மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய முயன்ற வழக்கில், திருவாரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அசோகனுக்கு 3 ஆண்டு சிறையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தொகுதியில் கடந்த 1996 முதல் 2006 வரை திமுக சார்பில் எம்எல்ஏவாக இருந்தவர் அசோகன். பின்னர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து விட்டார். இவர் தனது 2-வது மனைவி ஹேமாவுடன் சென்னை பட்டினப்பாக்கத்தில் வசித்து வந்தார்.
கடந்த 2015 டிசம்பர் மாதம் 6-ந் தேதி சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி வெளியே சென்ற ஹேமா, நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். ஆனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அசோகன் தனது கைத்துப்பாக்கியால்ஹேமாவையும் அவருடைய தாயாரையும் சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பானது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்னாள் எம்எல்ஏ அசோகனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையும் சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி இன்று தீர்ப்பளிரித்தார். முன்னாள் எம்எல்ஏ அசோகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.





