உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில்…!
ஓராண்டில் ஒரு தங்கம் வெல்வதே பலருக்கும் சவாலாக உள்ள வேளையில் இரண்டு தங்கங்ளை வசம் ஆக்கியிருக்கிறார் இளவேனில். துப்பாக்கி சுடும் சீனியர் உலகக்கோப்பையில் அறிமுகமான ஆண்டிலேயே இத்தகைய சாதனையை படைத்திருக்கிறார் தமிழக வீரர் இளவேனில்.
இவர் பிரேசிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக கோப்பையில் தங்கம் வென்று உலகத்தின் பார்வையை தன் பக்கம் ஈர்த்திருந்தார். இரண்டே மாதத்தில் மீண்டும் ஒரு தங்கத்தை தனதாக்கியிருக்கிறார் இளவேனில்.
சீனாவில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் பைனல் தொடரில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் களம் கண்ட அவர் 250. 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார். அனுபவ வீராங்கனைகள் பங்கேற்ற இந்த தொடரில் மெச்சதகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறந்த வீராங்கனைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார் இளவேனில்.
20 வயதான இளவேனில் கடந்த மே மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற சீனியர் உலககோப்பையில் முதன்முறையாக களம் கண்டார். அந்த போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார். எனினும் இடைவிடாத பயிற்சியும் முயற்சியுமே அவர் இந்த இடத்திற்கு முன்னேறி இருக்கிறது என்றார்.
தங்கமங்கை இளவேனில் விளையாட்டின் உச்சபட்ச அங்கீகாரமாக கருதப்படும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தாயகத்திற்கு பெருமை சேர்ப்பார் என்று நாடு எதிர்நோக்கி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




