--- --:--:-- --

விஷவாயு இருப்பதை கண்டறியும் நவீன புதிய கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ள பொறியாளர்

14

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தஞ்சையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். தஞ்சை சரபோஜி நகரை சேர்ந்தவர் அமிர்த கணேசன்.

 

எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்துள்ள கணேசன் கடந்த 12 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட கருவிகளை கண்டுபிடித்துள்ளார். தற்போது அவர் விஷ வாயுக்களை கண்டுபிடித்து எச்சரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

 

கழிவு நீர் தொட்டிகளில் இறங்கும் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிர் இழக்கும் நிலையில் அதனை தடுக்கவே இந்த கருவியை உருவாகியுள்ளதாகவும், கணேசன் கூறியுள்ளார். கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கும் நபர்கள் விஷவாயு இருப்பதை கண்டு பிடிக்கும் ஹெல்மெட் போன்ற கருவியை தலையில் அணிந்து இறங்க வேண்டும்.

 

அப்படி இறங்கும் போது விஷவாயு இருந்தால் அந்தக் கருவி எச்சரிக்கை செய்யும். பின்னர் அவருக்கு தேவையான பிராண வாயுவை அந்த கருவி வழங்கிவிட்டு கழிவு நீர் தொட்டிக்கு மேலே இருப்பவர்களுக்கும் சிகப்பு விளக்கு மற்றும் ஒளி மூலம் எச்சரிக்கை கொடுக்கும்.

 

இதன் மூலம் கழிவு நீர் தொட்டியில் இறங்கிய நபரை உடனடியாக மேலே தூக்கி காப்பாற்ற முடியும் என்கிறார் அந்த கருவியை கண்டுபிடித்த கணேசன். மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் இந்த கருவியை ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் செலவில் தயார் செய்துவிட முடியும் எனவும் கணேசன் கூறியுள்ளார். இனி அந்த கருவிக்கான அங்கீகாரத்தை அளிப்பது அரசின் கைகளில்தான் உள்ளது.

Leave a Reply

Right Menu Icon