--- --:--:-- --

குறைந்த பட்ச செயல் திட்டம் தயார்; மகாராஷ்டிராவில் சிவசேனா – என்.சி.பி., – காங்., கூட்டணி ஆட்சி உறுதி!!

IMG-20191116-WA0001

மகாராஷ்டிராவில், ஆட்சி அமைப்பதில் 20 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.சிவசேனா – தேசியவாத காங்கிஸ் – காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ள இம் மூன்று கட்சிகளின் தலைவர்களும், இன்று அம்மாநில ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளனர். இதனால் இந்தக் கூட்டணி ஆட்சியமைக்க ஆளுநர் சம்மதிப்பாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு மகாராஷ்டிரா அரசியலில் நிலவுகிறது.

 

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைத்து போட்டியிட்டது.கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போதே இரு கட்சி களுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடு ஏற்பட்டது. 288 தொகுதிகளில் சரிபாதி இடங்களை ஒதுக்க வேண்டும்.ஆட்சியில் சம பங்கு, முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்வது என்ற நிபந்தனைகளை சிவசேனா பிடிவாதமாக விதித்தது. இதனால் கூட்டணிப் பேச்சு கடைசி நிமிடம் வரை இழுபறியானது. கடைசியில் குறைந்த தொகுதிகளைப் பெற சம்மதித்து பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைத்து போட்டியிட்டது. பாஜக 165 இடங்களிலும், சிவசேனா 122 இடங்களிலும் போட்டியிட்டன. இக் கூட்டணியை எதிர்த்து காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

 

கடந்த 24-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதில் பாஜக (105), சிவசேனா (56), தேசியவாத காங்கிரஸ் (54), காங்கிரஸ் (44), சுயேட்சைகள் (29) தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாஜகவுக்கு தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும், சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கும் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால் ஆட்சியில் சம பங்கு, முதல் இரண்டரை ஆண்டுக்கு முதல்வர் பதவி என்பதில் சிவசேனா முரண்டு பிடிக்க, பாஜகவோ அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் சிவசேனா தலைவர் உத்தங் தாக்கரேவோ, மற்றொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மூலம் காங்கிரஸ் துணையுடன் ஆட்சியமைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டார். முதலில் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிவசேனா விலக வேண்டும் என சரத் பவார் தரப்பு கண்டிப்பு காட்ட, அதற்கும் சம்மதித்து, பாஜக உறவை சிவசேனா துண்டித்தது.

 

இவ்வாறாக 15 நாட்களுக்கும் மேலாக மகாராஷ்டிரா அரசியலில் ஏகப்பட்ட திரைமறைவு பேரங்கள் அரங்கேற, பாஜகவால் ஆட்சியமைக்க முடியாமல் கடைசியில் கடந்த வாரம் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

 

இந்நிலையில், சிவசேனா தலைமையில், தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்து கூட்டணி அரசு அமைக்கும் சூழல் இப்போது உருவாகியுள்ளது. இதற்காக இம்மூன்று கட்சிகளின் தலைவர்களும் அடுத்தடுத்து சந்தித்து, குறைந்தபட்ச செயல் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் தெரிகிறது.மேலும் முதல்வர் பதவி சிவசேனாவுக்கும், இரு துணை முதல்வர் பதவிகளை தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் பங்கிட்டுக் கொள்வது, அமைச்சர் பதவிகளைப் பொறுத்தவரை சிவசேனா (16), தேசியவாத காங்கிரஸ் (14), காங்கிரஸ் (12) என பங்கிட்டுக் கொள்வது என்பது வரை பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இதையடுத்து இம் மூன்று கட்சிகளின் தலைவர்களும் இன்று அம்மாநில ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்தக் கூட்டணிக்கு இறுதி வடிவம், நாளை டெல்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்திக்கும் போது முடிவாகும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் பாஜகவும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரப் போவதாக தெரிவித்துள்ளதால், ஆளுநர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதே, மகாராஷ்டிரா அரசியலில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon