உள்ளாட்சித் தேர்தல்: நகராட்சித் தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் சகோதரர் மற்றும் மைத்துனர் விருப்ப மனு!!
உள்ளாட்சித் தேர்தலில், தேனி அல்லி நகரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜாவும், பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவிக்கு மைத்துனர் சந்திரசேகரும் அதிமுக சார்பில் விருப்ப மனு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் இறுதி வாக்கில் நடைபெறும் என்றும், தேர்தல் பற்றிய அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்க்பபடுகிறது. இதனால் முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விரும்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
திமுக சார்பில் 14, 15 தேதிகளில் விருப்ப மனு பெறப்பட்ட நிலையில், ஆளும் அதிமுக சார்பில் நேற்றும், இன்றும் அந்தந்த மாவட்ட அதிமுக அலுவலகங்களில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் போட்டி போட்டு விருப்ப மனு செய்து வருகின்றனர். இதில் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி மேயர், 121 நகராட்சி தலைவர் பதவிகளுக்கு, அதிமுக பிரபலங்களிடையே பெரும் போட்டியே நிலவுகிறது. கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முக்கியத் தலைவர்கள் , அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரின் வாரிசுகளும் இந்தப் பதவிகளுக்கு போட்டியிட முட்டி மோதுகின்றனர்.
இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் குடும்ப உறுப்பினர்களும் விதிவிலக்கில்லை என்பது போல், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு அவருடைய தம்பியும், மைத்துனரும் விருப்ப மனு செய்துள்ளனர். தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா விருப்ப மனு செய்துள்ளார். இவர் தற்போது தமிழ்நாடு பால்வள ஒன்றியத்தின் சேர்மனாகவும் உள்ளார். அதே போல் ஓ.பி.எஸ்.சின் சொந்த ஊரான பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவிக்கு அவருடைய மைத்துனர் சந்திரசேகர் விருப்ப மனு செய்துள்ளார்.
ஏற்கனவே ஓ.பி.எஸ்.சின் மகனான ஓ.ரவீந்திரநாத் குமார், தேனி எம்.பி.யாக உள்ளார்.இந்நிலையில் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மேலும் இருவர், நகராட்சித் தலைவர் பதவிகளை குறிவைத்து விருப்ப மனு செய்திருப்பது அதிமுகவில் பரபரப்பையும், சிறிது சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




