--- --:--:-- --

தேனியில் எஸ்எஸ்ஐ அடித்து கொலை!

1

தேனியில் சாலையை மறித்துப் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த கும்பல் தாக்கியதில் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழந்தார். இதையடுத்து 3 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள கணபதி நகரைச் சேர்ந்தவர் 55 வயதான செந்தில்குமார். கடந்த 1995-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை பணியில் சேர்ந்த இவர், சிறப்பு சார்பு ஆய்வாளராகப் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

 

 

இதையடுத்து சமீப நாட்களாகத் தேனி துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்த இவர், தீபாவளி பண்டிகை தினமான நேற்றிரவு பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் அல்லிநகரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் தாக்கியதில் சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

 

 

தேனி நகரில் உள்ள சமதர்மபுரம் வழியாக சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் சென்றபோது, இளைஞர்கள் சிலர் சாலையை மறித்து பட்டாசு வெடித்தும், காரின் முன்பாக நின்றுகொண்டு ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்தபடியும் இருந்ததாக கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கலைந்து செல்லுமாறு செந்தில்குமார் கூறியதால், அக்கும்பல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

 

 

தொடர்ந்து அவர்களின் அத்துமீறலை செந்தில்குமார் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ய முயன்றதால் ஆத்திரமடைந்த நபர்கள், அவரது செல்போனைப் பறித்துக்கொண்டு அவரைத் தாக்கியுள்ளனர். இதில் செந்தில்குமார் மயங்கி கீழே விழுந்ததும், அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானது.

 

 

அங்கிருந்தவர்கள் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் உடற்கூறாய்விற்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை விரைந்து பிடிக்கத் தேனி நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

 

 

மேலும், சம்பவ இடமான சமதர்மபுரத்திலேயே சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக முகாமிட்டு, சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட 5-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையன்று பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்து, ரீல்ஸ் எடுத்த கும்பலைத் தட்டிக் கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியிலும் காவல்துறையினரிடையேயும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

இது தொடர்பாக தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதரி கூறுகையில், “சிறப்பு சார்பு ஆய்வாளர் சாதாரண உடையில் இருந்துள்ளார். பட்டாசு வெடித்து வீடியோ எடுத்த இளைஞர்களில் ஒருவரை பிடிக்க முயன்ற போது, தனது முழங்கையால் தாக்கியதால் சார்பு ஆய்வாளர் சரிந்து கீழே விழுந்துள்ளார். ரோந்து போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து
சென்ற நிலையிலும் அவர் உயிர் பிழைக்கவில்லை. சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு ஏற்கெனவே இதயம் தொடர்பாக சிக்கல்கள் இருந்துள்ளன” என்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon