விஜய் மீதான அவதூறு வழக்கில் தி.மு.க கவுன்சிலருக்கு முன் ஜாமீன்
முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தி.மு.க கவுன்சிலர் டி.சுதாவிற்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், “அதிகாரத்தில் இருப்பவர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும்; காவல்துறையைக் கைது ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது” எனக் கடும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அரசு மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு அரசியல் ரீதியிலான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் என்றும், பேச்சுரிமையைப் பறிக்கும் வகையிலும் யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கிலும் காவல்துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது நடவடிக்கையை எதிர்கொண்ட தி.மு.க கவுன்சிலர் டி.சுதாவிற்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதி என்.ரமேஷ் இத்தீர்ப்பினை அளித்துள்ளார்.
அக்டோபர் மாதம் நடைபெற்ற தி.மு.க-வின் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் பேசியதாக தி.மு.க கவுன்சிலர் சுதா மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இதனால், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த அவருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 7-ம் தேதி சென்னை – ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த தி.மு.க முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சியில் 95-வது வார்டு தி.மு.க கவுன்சிலரும், அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகியுமான டி.சுதா, முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீஸார் தி.மு.க கவுன்சிலர் டி.சுதா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், தி.மு.க கவுன்சிலர் டி.சுதா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு திங்கள்கிழமை (02.11.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் டி.சுதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அ.தாமோதரன், “மனுதாரருக்கு தற்போது 60 வயதாகிறது. இதற்கு முன்பாக அவர் மீது எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை. அவர் முதலமைச்சர் குறித்த தனது பேச்சுக்காக ஏற்கெனவே வருத்தம் தெரிவித்துவிட்டார். எதிர்காலத்திலும் கவனத்துடன் பேசுவதாக உறுதியளித்துள்ளார்” என்று கூறினார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தரப்பு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ரமேஷ் விரிவாக கருத்து தெரிவித்து உத்தரவுகளைப் பிறப்பித்தார், “அரசியல் ரீதியிலான விமர்சனங்களுக்கும், பேச்சுரிமைக்கும் அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள பாதுகாப்பை புறம்தள்ளி, கைது நடவடிக்கையை ஒரு தண்டனை வழங்கும் கருவியாக ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அரசியல் ரீதியாக எழும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் காவல் துறையை ஆயுதமாக்கி கைது நடைமுறையை மேற்கொள்ளக்கூடாது.
ஆட்சியில் இருப்பவர்களின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், கேள்வி எழுப்புவதும் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம். அரசியல் தலைவரை விமர்சிப்பது அல்லது அவதூறாக பேசுவது மட்டுமே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றமாகி விடாது. அந்த பேச்சு வன்முறையை தூண்டும் விதத்தில் உண்மையிலேயே பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தினால் மட்டுமே அதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பேச்சுரிமைக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பு சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
முதல்வர் குறித்து மனுதாரர் அவதூறாக பேசியிருந்தால் அதற்காக அவதூறு வழக்கு தொடரலாம். அதை விடுத்து அரசியல் உள்நோக்கத்துடன் வேறு குற்றப்பிரிவுகளை பயன்படுத்தி போலீஸார் நடவடிக்கை எடுப்பது சட்ட நடைமுறைகளை தவிர்ப்பது போலாகிவிடும். தற்போதுள்ள சூழலில், நாட்டில் மட்டுமின்றி தமிழகத்திலும் அரசியல் விவாதங்கள் பெருமளவில் சமூக வலைதளங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் சமூக வலைதளப் பிரிவுகளை நிர்வகித்து வருகின்றனர். இந்த சமூக வலைதளப்பிரிவு, எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதும், கேலி, கிண்டல் செய்வதும், அவதூறாகப் பேசுவதும் தொடர்கதையாக உள்ளது.
ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான புகார்களிலும், எதிர்க்கட்சியினருக்கு எதிரான புகார்களிலும் காவல்துறை ஒரே மாதிரியான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். காவல்துறை அரசுக்குத்தான் சேவை செய்கிறதேயன்றி, ஆளுங்கட்சிக்கு சேவை செய்யவில்லை. குறிப்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த பாகுபாடும் இன்றி காவல்துறை செயல்பட வேண்டும்.
அதேபோல ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு காணொலியாகவும் ஆவணமாகவும் உள்ள பேச்சு தொடர்பான வழக்குகளில், விசாரணைக்காக மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையோ திருப்தி படுத்தும் நோக்கில் கைது நடவடிக்கை இருக்கக்கூடாது. எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டால் சில மணி நேரங்களிலேயே போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
ஆனால் அதுவே ஆளுங்கட்சியினர் என்றால் வழக்குப் பதிவு செய்வது கூட இல்லை என்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு ஆட்சியின்போதும் எழுந்து கொண்டிருக்கிறது. போலீஸாரின் நடவடிக்கைகளை பொதுமக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





