தீபாவளி சிறப்பு ரயில்கள் முன்பதிவு – டிக்கெட் விற்று தீர்ந்தன
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்த நிலையில் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக மேலும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது.
அதன்படி, ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் இடையே நவம்பர் 5ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் நவம்பர் 7ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் புறப்படுகிறது. மேலும், ராமேஸ்வரம் – தாம்பரம் இடையே நவம்பர் 9ஆம் தேதி மாலை 4.55 மணிக்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. திருவனந்தபுரம் வடக்கு – தாம்பரம் இடையே நவம்பர் 10 ஆம் தேதி இரவு 8 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில், மறுமார்க்கத்தில் நவம்பர் 11ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து நண்பகல் 2 மணிக்கு செல்கிறது.
அதேபோல், சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் இடையே நவம்பர் 10 ஆம் தேதி இரு மார்க்கத்திலும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எழும்பூரில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்படும் ரயில், அதே நாளில் மாலை 5.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நவம்பர் 10 ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 11மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
தாம்பரம் – செங்கோட்டை இடையே நவம்பர் 9ஆம் தேதி இரவு 11.55 மணிக்கும், மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து நவம்பர் 10ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இது தவிர, திருவனந்தபுரம் வடக்கு – சென்னை எழும்பூர் இடையே நவம்பர் 10ஆம் தேதி இரவு 7.40 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் நவம்பர் 11ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு ரயில் புறப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களுகம் விற்று தீர்ந்தன. தீபாவளி வரும் 8 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மேலும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுமா என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




