கோவை சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்!
தேனி சிறைக் கைதிகள் தப்பியோடிய தாக்கம் குறையாத நிலையில் கோவை சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அக்டோபர் 26ஆம் தேதி 92 கைதிகள் அடைக்கப்பட்டிருந்த 3-வது பிளாக்கில் 23 வயதான கைதி முத்து இளங்கோவன் வலிப்பு வந்தது போல் நாடகமாடி சிறைக் காவலர்கள் மதன்மோகன், ஸ்டாலின் பிரபு, தங்க பாண்டி ஆகியோரை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பி ஓடினர்.
இது தமிழ்நாட்டில் பரபரப்பை கிளப்பியது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தனை கைதிகள் ஒரேநேரத்தில் சிறையில் இருந்து தப்பியது சர்ச்சையை கிளப்பியது. கிட்டதட்ட ஒன்றரை நாளுக்குப் பின் தப்பியோடிய கைதிகளில் 15 பேர் பிடிக்கப்பட்டனர். இருவர் சரணடைந்தனர். எனினும், சிறைக் கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை அடுத்து 9 சிறைக் காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய சிறைத்துறை இயக்குநராக கே.சங்கரை நியமனம் செய்தது தமிழக அரசு.
இன்று காலை கூட தேனி சம்பவத்தின் எதிரொலியாக மதுரை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக தேனி சிறை நிர்வாகத்தை நேரடியாக கண்காணித்து வந்த மதுரை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜை அதிரடியாக சற்று முன் முதலமைச்சர் விஜய் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இப்படி தேனி சிறைக் கைதிகள் தப்பியோடிய சம்பவத்தின் தாக்கம் குறையாத நிலையில் மீண்டும் ஒரு கைதி தப்பியோடிய சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. இம்முறை கோவை சிறையில் இருந்து கைதி தப்பியோடியிருக்கிறார். அன்னூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட ராகவன் என்ற கைதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்க அழைத்துவரப்பட்டார். கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், சிறை வளாகத்தில் இருந்து கைதி ராகவன் தப்பியோடியிருக்கிறார். இதையடுத்து பந்தயசாலை போலீசார் ராகவனை தேடி வருகின்றனர்.
முன்னதாக, கைதி ராகவன் நேற்று மாலை அன்னூர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது அன்னூர் போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவை மத்திய சிறைக்கு ராகவனை அழைத்து வந்த பொழுது, இரண்டாவது முறையாக காவல்துறையினிடமிருந்து தப்பியோடியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





