நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்.!
தமிழ் திரையுலகில் தனது இயல்பான நடிப்பினாலும் பாசமிக்க பாட்டி கதாபாத்திரங்களினாலும் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த மூத்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் வயது மூப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 93. நாடக மேடைகளில் இருந்து திரையுலகிற்கு வந்து, பல தலைமுறை ரசிகர்களைத் தனது சிரிப்பாலும் நடிப்பாலும் கவர்ந்த இவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மேடை நாடகங்களில் நடித்து வந்த நடிகை வத்சலா ராஜகோபால். அதைத்தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு தனது 60 வயதில்தான் முதல் சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் நடித்த முதல் திரைப்படம் ரோஜா, மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில், நடிகை மதுபாலாவுக்கு பாட்டியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். வயதான காலத்தில் சினிமாவில் அறிமுகமானாலும், தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இதனை தொடர்ந்து சதி லீலாவதி, திருடா திருடி, காலமெல்லாம் காதல் வாழ்க, அந்நியன், ரிதம், மொழி, வின்னர் என 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். படங்கள் மட்டுமில்லாமல் சித்தி, ஆனந்தம், முந்தானை முடிச்சு போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பல்வேறு கதாபாத்திரங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில், தற்போது 93 வயதாகும் நடிகை வத்சலா ராஜகோபால், வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவு செய்தி திரைத்துறையினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் பல்லாவரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




