யூடியூப்-புக்காக பேய் வேடமிட்டு பீதி ஏற்படுத்திய மாணவர்கள் கைது!
பெங்களூருவில் யூடியூப் சேனலுக்காக பேய் போல வேடமிட்டு பொதுமக்களை மிரட்டும் செயலில் ஈடுபட்ட மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள ஷெரிஃப் நகரில் ஞாயிற்றுக்கிழமை அன்று நள்ளிரவு முழுக்க வெள்ளை நிற உடையில் ரத்தக்கரை படிந்த நிலையில் ஒருவர் நடமாடி உள்ளார்.
அவ்வழியே வந்த பொதுமக்கள் முன்பு திடீரென தோன்றி அவர்களை அச்சுறுத்தியுள்ளார். உருட்டுக் கட்டையை கையில் வைத்துக்கொண்டு துரத்தியுள்ளார். இந்த காட்சிகளை சிலர் மறைவாக நின்று வீடியோ எடுத்துள்ளனர்.
இதனால் பீதி அடைந்த அந்த பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த காவலர்களையும் பேய் வேடமிட்டு இருந்தவர் விரட்ட முயன்றார். ஆனால் அவரை காவலர்கள் மடக்கிப் பிடித்தனர். அப்போது வீடியோ எடுத்து கொண்டிருந்தவர்கள் தாங்கள் மாணவர்கள் என்றும் யூடியூப் சேனலுக்காக இவ்வாறு நடந்து கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து ஏழு மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.





