எங்கப்பா இருக்க ‘அரிசிராஜா? ஒழுங்கா வந்துரு! வனத்துறையினருக்கு போக்கு காட்டும் யானை
பொள்ளாச்சி அருகே உள்ள கிராமங்களில் மக்களை பீதிக்குள்ளாக்கி வரும் அரிசி ராஜன் என்ற காட்டு யானையை பிடிக்க, அரிசி மூட்டைகளுடன் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். எனினும், யானை சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அர்த்தனாரி பாளையம், பருத்தியூர், கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களை, அரிசிராஜன் என்ற காட்டு யானை சேதப்படுத்தி வருகிறது. இதற்கு அரிசி மிகவும் பிடிக்கும் என்பதால் தான், அரிசி ராஜன் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் இந்த யானை, ராதாகிருஷ்ணன் என்பவரின் தோட்டத்தில் புகுந்து, அவரை தாக்கி கொன்றது. இதில், மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அச்சுறுத்தி வரும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் இறங்கினர்.
இதையடுத்து, விளை நிலங்களை சேதப்படுத்தி,மக்களை பீதிக்குள்ளாக்கி வரும் அரிசி ராஜாவை மயக்க ஊசி கொடுத்து பிடிக்க வனத்துறை முடிவு செய்தது. இதற்காக, கலீம், பாரி ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, டாப்சிலிப் பகுதியில் வனத்துறையினர் 70க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்த யானைக்கு அரிசி பிடிக்கும் என்பதால் அரிசி மூட்டைகளை கொண்டு வந்து, அதை வளைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஆனாலும் வனத்துறையினரிடம் சிக்காமல் இந்த யானை போக்குகாட்டி வருகிறது.
தற்போது அரிசி ராஜா இருக்கும் இடத்தை ட்ரோன்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனலௌம், யானை பீதியால் அர்த்தநாரிப்பாளையம் கிராம மக்கள் தூக்கம் தொலைத்துள்ளனர். யானை வரக்கூடும் என்ற அச்சத்தில், அருகிலுள்ள பெருமாள் கோவில்பாறை மலைப்பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அர்த்தனாரிபாளையம் வனப்பகுதியில் காட்டு யானை அரிசி ராஜா பதுங்கியுள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடவேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரோன் உள்ளிட்டவைற்றின் உதவியுடன் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.





