வாக்காளர் பட்டியல் – வரும் சனிக்கிழமை சிறப்பு முகாம்கள்
முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தற்கான சிறப்பு முகாம்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இளம் வாக்காளர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்றும், நாளையும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
மேலும், முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக, தேவைக்கேற்ப மாவட்டங்களில் நாளை மறுநாள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் பெருநகரங்களில் சிறப்பு கவனம் அளிக்கப்படும் எனவும், இதற்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்வியறிவுக் குழுக்களின் சேவைகள் திறம்பட பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து கண்காணிக்க வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தொடர்ந்து கூட்டங்களை நடத்துவார்கள் என்றும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





