வீரமணி வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற கோரிய மனுவுக்கு நீதிபதி கமெண்ட்
பிரபல தொழிலதிபரான ‘ஜெம் கிரானைட்ஸ்’ உரிமையாளர் ஆர்.வீரமணி (84) தொடர்பான போக்சோ வழக்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கி இருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிதியுதவி கேட்டு வரும் சிறுமிகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த வழக்கில், வீரமணி, அவரது நண்பர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன், வீரமணியின் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாகப் பணிபுரிந்த கணேசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை முதலில் சென்னை விபசார தடுப்புப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். தற்போது இந்த வழக்கை கூடுதல் கமிஷனர் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வு படை விசாரித்து வருகிறது. வீரமணி மீது இதுவரை 15-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறை தரப்பில் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகப் புகார் அளிப்பதற்காகச் சிறப்புப் புலனாய்வுக் குழு சார்பில் பிரத்யேக செல்போன் எண் (9345319676) வெளியிடப்பட்டது. இந்த எண்ணுக்குத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதன் அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் ரகசிய விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜெம் வீரமணி மீது மதுரையை சேர்ந்த சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்காக அவரை சென்னையில் உள்ள போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். முந்தைய விசாரணையின் போது காணொலி காட்சி வாயிலாக ஜெம் வீரமணியை நீதிபதி விசாரித்த நிலையில், நேற்று புதன்கிழமை விசாரணைக்காக வீரமணியை போலீசார் நேரில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், ஜெம் வீரமணி மீதான வழக்கில் முன்னாள் காவல் ஆணையர் அருணின் தலையீட்டின் காரணமாக, வீரமணி, சாந்தியின் பெயர் புகாரில் குறிப்பிட்டிருந்தும் காவல் துறையினர் சரிவர விசாரிக்காததால், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி, யூடியூபர் வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வழக்கை மூட ரூ. 40 கோடி வரை பணம் கைமாறியுள்ளதால், வழக்கை மூடியது குறித்தும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆதாரங்களை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு வழங்கும்படி வாராகிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வாராகி தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அக்டோபர் 1 மற்றும் 6-ஆம் தேதிகளில் சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராகி, ஆதாரங்களை சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு புலனாய்வு குழு தரப்பில், ‘வழக்கின் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது. மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த கட்ட அறிக்கை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அப்போது நீதிபதி “இந்த வழக்கை மொசாட் (இஸ்ரேலிய உளவு அமைப்பு) வசம் ஒப்படைக்கலா?” என்று கமெண்ட் செய்தார். பிறகு, “இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டால், அவர்கள் விசாரணையை மீண்டும் முதலிலிருந்தே தொடங்க வேண்டியிருக்கும்” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும், “விசாரணை முறையாக நடந்து வருவதால் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை. வழக்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா சிறப்பாக விசாரித்து வருகிறார்” என பாராட்டு தெரிவித்த நீதிபதி, காவல் துறை தரப்பில் அடுத்த கட்ட அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியும், ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டும், விசாரணையை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




