--- --:--:-- --

கனமழையால் கிடுகிடுவென உயர்ந்த வைகை அணை!

5

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்துள்ளதுடன், மதுரை உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

 

ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாததால் அணைக்கான நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் சரிந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேகமலை, போடி, கொட்டக்குடி மற்றும் மூலவைகை ஆறு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு வினாடிக்கு 70 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது வினாடிக்கு 406 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைப்பகுதியில் 17.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

 

அடையப்பெற்ற நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து 42 அடியை எட்டியுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 6,091 மில்லியன் கனஅடியாக உள்ள நிலையில், தற்போது 1,136 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

அணையில் இருந்து மதுரை உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 86 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருவது, குடிநீர் மற்றும் பாசன தேவைகளை எதிர்நோக்கியுள்ள 5 மாவட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon