சாத்தான்குளம் மாநில நெடுஞ்சாலையில் ஹிந்திலும் பெயர் பலகை!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகையில் ஊரின் பெயர்கள் “ஹிந்தியில்” எழுதப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டி பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் ஹிந்தியிலும் பெரிய அளவில் எழுதப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த ஆண்டு திருப்புத்துார் வழியாக செல்லும் திருமயம் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் முன்பு தமிழ், ஆங்கிலம், மொழியையுடன் ஹிந்தி ஊர் பெயர் எழுதப்பட்டிருந்தன. அதில் திருக்கோஷ்டியூரை அடுத்துள்ள கிராமங்களில் பெயர் பலகைகளில் ஹிந்தி மொழி மீது கருப்பு வர்ணம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல பெரம்பலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் புதிதாக வைக்கப்பட்ட பெயர்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே தமிழ்நாடு அரசு பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயரை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் என சமீபத்தில் உத்தரவிட்டிருந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் ஹிந்தியில் ஊர் பெயர்கள் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





