இரண்டு தொகுதிகள் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தரும் CPI & CPM?
தவெக கூட்டணியில் அங்கம் வகிக்காத சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தருகிறதா என்பது குறித்தான கேள்விக்கு திமுக வேட்பாளர் பரந்தாமன் பதில் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உட்பட ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது. இதில், திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், தவெக சார்பில் ஏற்கனவே அந்தத் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்யபாமாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தவெக கூட்டணி ஆட்சியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயுஎம்எல் ஆகியவை அங்கம் வகித்து அமைச்சரவையில் இடம் பெற்று தங்களது ஆதரவை அளித்துவருகின்றன. அதேசமயம், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் ஆட்சியில் அங்கம் வகிக்காமல் வெளியில் இருந்து தங்களது ஆதரவை அளித்துவருகின்றன.
ஆட்சியில் அங்கம் வகித்து ஆதரவை வழங்கிவரும் கட்சிகளை கூட்டணியில் இணைக்க தவெக முடிவு செய்து கடந்த ஜூலை மாதம் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது. இதில், காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயுஎம்எல் ஆகியவை பங்கேற்று கூட்டணியை உறுதி செய்தன. அப்போதே அந்தக் கூட்டத்தை இடதுசாரிகள் புறக்கணித்தன. இதனைத் தொடர்ந்து நேற்று (9ஆம் தேதி) முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் தலைமையில், இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதிலும், காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் பங்கேற்ற நிலையில், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை புறக்கணித்தன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு, ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ எனப் பெயரும் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, தவெக தலைமையிலான கூட்டணியில் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். எதிர்வரும் இடைத்தேர்தல்களை கூட்டணியாக சந்திப்போம் எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று திமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்தை, திமுக வேட்பாளர்கள் பரந்தாமன் மற்றும் சுகன்யா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து பரந்தாமன் மற்றும் சுகன்யா ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பரந்தாமன், “தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றோம். அப்போது அவர், ‘உங்களை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே, தலைவர் ஸ்டாலின், என்னை தொடர்புகொண்டு, திமுக சார்பாக இவர்களை வேட்பாளர்களாக அறிவிக்க இருக்கிறோம்’ எனத் தெரிவித்தார். எங்களது மகிழ்ச்சியை அவரிடம் தெரிவித்துள்ளோம் எனத் தெரிவித்தார்” என கூட்டணி தலைவர்களிடம் பேசிவிட்டே எங்களை வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார் என்பதை தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பரந்தாமன் பதில் கொடுத்தார். அவர் தெரிவித்ததாவது; “தவெக சார்பில், அவர்கள் கட்சியின் வேட்பாளர்களை அவர்கள் அறிவித்துள்ளார்கள். களத்தில் சக வேட்பாளர்களாகவே நாங்கள் பார்க்கிறோம். எங்களை வேட்பாளர்களாக அறிவிப்பதற்கு முன்பே, திமுக தலைவர் ஸ்டாலின், எங்கள் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் பேசிவிட்டே எங்களை அறிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




