--- --:--:-- --

ஆன்லைனில் டாஸ்மாக் மது விற்பனை.. தமிழக அரசின் முடிவு ரத்து செய்யக்கோரி மனு

01

ன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பள்ளிக்கூடம் மற்றும் கோவில் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட கடந்த மே 12ஆம் தேதி முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையிலும், அவற்றில் பல கடைகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கும் வசதியை தொடங்கி வைத்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆகஸ்ட் 7ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்; ஆன்லைன் மூலம் மதுவாங்கும் போது, 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மதுவகைகளை வாங்க முடியாது என்று டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளித்தாலும், பெரியவர்கள் மது வாங்கிய ஆன்லைன் முகவரியை கொண்டு சிறுவர்களும் மது வாங்க வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

 

முதியவர்கள் மற்றும் பெண்கள் ரேஷன் கடை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் வரிசையில் நிற்பவர்களுக்கு இதுபோல ஆன்லைன் பதிவுகள் செய்ய எந்த வசதியும் இல்லாத நிலையில், மது குடிப்பவர்களுக்கு தமிழக அரசு இந்த வசதியை செய்து கொடுத்துள்ளதால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய தீங்கு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

எனவே, ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையையும், அதற்கு அனுமதி வழங்கி நிதித்துறை செயலாளர் ஜூலை 24ஆம் தேதி பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் தீர்வு காணப்படும் வரை அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கே.பாலு கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon