ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்..!
திருச்சி: ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். காவிரி ஆற்றில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படும் நிலையில், இந்த நாட்களில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்களின் ஆன்மா சாந்தியடையும், குடும்பத்தில் நன்மையும் வளமும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆண்டு ஆடி அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறைக்கு திருச்சி மட்டுமின்றி கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்தனர். காவிரி ஆற்றில் பிண்டம் கரைத்து, முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், குடும்பம் செழிக்கவும் வேண்டி தர்ப்பணம் செய்தனர். தர்ப்பணம் முடித்தவர்கள் அம்மா மண்டபத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர். மேலும், பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கி தானமும் செய்தனர்.
திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் முன்னோர் வழிபாடு செய்தனர். குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஆற்றில் நீராடி பின்னர் தர்ப்பணம் செய்தனர்.
காவிரியில் நீராடி தர்ப்பணம் செய்த பக்தர்கள் தொடர்ந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். பலர் வீடுகளிலும் விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். இதேபோல் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் திருக்குளம் அருகிலும் புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
ஆடி அமாவாசையையொட்டி படித்துறைகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்ததால், தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டன. அம்மா மண்டபம் பகுதியில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்யிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.இன்று காலை உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சிறப்பு புறப்பாடாகி சந்தனு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு திருமஞ்சனம் கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சி காவிரி கரையோரப் பகுதிகளில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், முக்கிய படித்துறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





