--- --:--:-- --

சோத்துக்கு ஆசைப்பட்டு ஜெயிலுக்கு போன வாலிபர்!

9

கடந்த மூன்றாம் தேதி சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் ஈரோடு ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அவை வெடிக்க உள்ளதாகவும் மிரட்டியுள்ளார். மேலும் தன்னை ஜம்மு காஷ்மீரில் இருந்து அனுப்பி வைத்து உள்ளார்கள் என்றும், தனது பெயர் இப்ராகிம் என்றும் கூறியுள்ளார்.

 

இதனையடுத்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இந்த தகவல் ஈரோடு காவல் நிலையத்திற்கு தெரிவிக்கபட்டது. இதனைக்கேட்ட ஈரோடு போலீசார் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் போலீசாரை உசார் நிலைக்கு ஆயத்தப்படுத்தியுள்ளனர்.

 

இது மட்டுமில்லாமல் ஈரோடு ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் அவர் மிரட்டியது போல் எந்த வெடிகுண்டு சிக்கவில்லை. இதனையடுத்து அந்த நபர் கூறிய தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என புரிந்து கொண்ட போலீசார் அந்த நபர் குறித்த விசாரணையை முடுக்கி விட்டனர்.

 

முதல் நடவடிக்கையாக அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணை ட்ராக் செய்தனர். இந்த விசாரணையில் செல்போனின் உரிமையாளர் லிங்கராஜ் என்பதை கண்டறிந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கடந்த 1ஆம் தேதி குடிபோதையில் செல்போனை தொலைத்து விட்டதாக கூறியுள்ளார் லிங்கராஜ். இதன்மூலம் லிங்கராஜின் செல்போனை மர்ம நபர் ஒருவர் பயன்படுத்தி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை போலீசார் உறுதி செய்தனர்.

 

இதனை தொடர்ந்து செல்போன் எண்ணின் சிக்னலை பயன்படுத்தி மர்ம நபரை தேடும் பணி தீவிரம் ஆக்கப்பட்டது. இந்த தேடுதலில் செல்போன் டவரை கணக்கிட்ட போலீசார் ஈரோடு ரயில் நிலையம் அருகே மறைவாக நின்று கொண்டிருந்த சந்தோஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பதையும் உறுதி செய்தனர்.

 

மிரட்டலுக்கான காரணத்தை சந்தோஷிடம் கேட்ட போது அவரின் வாக்குமூலம் போலீசாருக்கு அதிர்ச்சி தரும் வகையில் இருந்தது. அதில் தனக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்ததாகவும், தற்போது இருவரும் தன்னுடன் இல்லை என்றும் கூறியுள்ளார்.

 

மேலும் தான் தனியாக வாழ்க்கை நடத்தி சிறுமுகை அருகே உள்ள மில் ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும் மனைவிகளின் பிரிவு, அதிக வேலைப்பளு ஆகியவை தனக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பை உண்டாக்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.

 

இதனால் ஒரு கட்டத்தில் வேலையை விட்ட தான் ஜெயிலுக்கு சென்றால் சாப்பாடு கிடைக்கும் என்பதால் எண் 100 ஐ தொடர்புகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் சந்தோஷை கோர்ட்டில் ஆஜர் செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon