60 ஆண்டுகளாக மயானத்தை தேடும் கிராம மக்கள்!

எங்கே மயானத்திற்கான பாதை? இதுதான் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கொட்டப்பட்டி கிராம மக்களின் கேள்வி. திருச்சி மாவட்டம் மணப்பாறையடுத்த தொப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிறுகிராமம் கொட்டப்பட்டி. மணப்பாறையில் இருந்து குளித்தலை செல்லும் நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்ட எல்லை பகுதியாக அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

 

இங்கு மயானத்திற்கென எந்த தனி இடமும் இல்லாததால் ஆற்றங்கரை, குளத்து வாரி, ஊருக்கு ஒதுக்குப் புறம் என சடலங்களை எரிக்கும் அவலம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

மற்ற சமூகத்தினருக்கும், பட்டியலின சமூக மக்களுக்கும் ஒரே இடத்தில் மயானம் அமைந்திருப்பது வரவேற்க வேண்டிய விஷயம் என்றாலும் சடலங்களை எடுத்து செல்ல முறையான பாதை இல்லாமல் இருப்பதாகவும் மயான கொட்டகை இல்லாததால் மழை பெய்தால் எரியூட்டப்பட்ட சடலம் அப்படியே பாதியில் நின்று விடுவதாகவும் உறவினர்கள் தார்ப்பாய் பிடித்துக்கொண்டு சடலத்தை மீண்டும் எரியூட்டும் அவலநிலை இருப்பதாகவும் கூறுகின்றனர்.

 

மேலும் சுமார் 60 ஆண்டுகளாக நிலவி வரும் இந்த அவலத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறும் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தால் ஆவணப்படுத்தப்பட்ட தங்களுக்கான மயானம் எங்கு அமைந்துள்ளது எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

 

தற்பொழுது ஊருக்கு ஒதுக்குப்புறமாக பள்ளிக்கு அருகே உள்ள மயானத்திற்கு பதிலாக புதிய மயானத்தை அமைத்து தார்சாலை, மின்விளக்கு வசதி போன்றவற்றையும் செய்து தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


Leave a Reply