எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் இன்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கொடுத்தார். தமிழ்நாடு 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாடு அரசியலில் பல்வேறு வியப்புகளை ஏற்படுத்திவருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போக அமைச்சரவையில் பங்கோடு கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது 108 இடங்களை வென்ற தவெக.
இந்தத் தேர்தலில் திமுக –தவெக இடையேதான் போட்டி என தேர்தல் சமயத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய். அதுபோலவே தேர்தல் முடிவுகளில் தவெகவுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை வென்று இரண்டாம் இடம் பிடித்தது திமுக. இந்தத் தேர்தலில் மூன்றாம் இடம் பிடித்த அதிமுக தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி ரிசார்டில் தங்கவைக்கப்பட்டனர்.
மேலும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்படத் துவங்கினர். பின்னர் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானமாக சென்றனர்.
அதேசமயம், சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காமல் இருந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களைச் சுற்றி பல்வேறு விவாதங்கள் எழுந்தன. ஆனால், அவர்கள் இருவரும் தங்கள் தொகுதிகளுக்குச் சென்றனர். இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. பதவியை சி. விஜயபாஸ்கர் ராஜினாமா செய்திருக்கிறார்.
முன்னதாக நேற்று (15ஆம் தேதி) அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், “உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும்.. ‘வெற்றிக்கான பாதை அல்ல.’ வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல… எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதேபோல் இன்று காலை தனது எக்ஸ் பக்கத்தில், ”தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’ உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?” என கேள்வி எழுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார் சி. விஜயபாஸ்கர். தனது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் இன்று கொடுத்துள்ளார்.
ஏற்கனவே அதிமுகவில் இருந்து மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்துள்ள சி. விஜயபாஸ்கர் அடுத்ததாக எந்தக் கட்சியில் இணையப்போகிறார் எனும் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அதேசமயம், சி. விஜயபாஸ்கரின் ராஜினாமாவோடு சேர்ந்து அதிமுகவின் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் இதுவரை தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதன் மூலம் சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 42 என குறைந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




