கொல்லூர் மூகாம்பிகா கோயிலுக்கு செல்வதன் பின்னணி என்ன.?
தமிழக முதல்வர் விஜய் 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லி பயணத்தை இன்று 12ம் தேதி முடிக்கும் முதல்வர் விஜய் அங்கிருந்த நேரடியாக கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு இன்று மதியம் 3 மணிக்கு செல்லவுள்ளதாக கோயில் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் இருந்து 458 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது. சக்தி வாய்ந்த அம்பாள் கோவில்களில் ஒன்று கொல்லூர் மூகாம்பிகை கோவில். இங்கு மூகாம்பிகை சிவசக்தி சொரூபத்தில் காட்சி தருகிறார். மகிசாசூரனை வதம் செய்த மூகாம்பிகை அம்மன் எழுந்தருளி உள்ள இந்த கோவில், மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவில் கொடசாத்திர மலை அடிவாரத்தில் வற்றாத ஜீவ நதியான சவுபர்னிகா ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது. தாய் மூகாம்பிகை ரத்தின கற்களால் ஆன ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார ரூபினியாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
இந்த கோவிலில் குடிகொண்டிருக்கும் ஜோதிர்லிங்கத்தில் ஒரு அதிசயம் இருப்பதை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. லிங்கத்தின் மத்தியில் தனித்தன்மை வாய்ந்த அதிசயிக்கத்தக்க தங்க நிற கோடு ஒன்று இருக்கிறது. இது லிங்கத்தை சரிபாதியாக பிரிக்கிறது. லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் போது மட்டும் இது ஒளிரும். அந்த கோடு பிரிப்பதில் லிங்கத்தின் வலது பாதி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரையும், இடது பாதி காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த பஞ்சலோக சிலைக்கு ஆதிசங்கரர் அபிஷேகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயிலுக்கு படையெடுத்த பிரபலங்கள் பட்டியல் : பல தசாப்தங்களாக, இக்கோயில் தென்னிந்தியாவில் பிரபலங்கள் அதிகம் வந்து செல்லும் கோயில்களில் ஒன்றாக அமைதியாக மாறியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான எம். ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் இதன் புகழ்பெற்ற பக்தர்களில் அடங்குவர். கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பல அரசியல்வாதிகளும் தங்கள் தொழில் வாழ்க்கையின் முக்கிய காலகட்டங்களில் இந்த ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.
கன்னடத் திரையுலகைச் சேர்ந்த ரிஷப் ஷெட்டி, துனியா விஜய் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட நடிகர்களும் திரைப்பட இயக்குனர்களும் இந்த கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் திரைப்பட இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோர் 2024-ல் ஒன்றாக இந்த ஆலயத்திற்கு வருகை தந்து, கணிசமான கவனத்தை ஈர்த்தனர்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகை பூஜா ஹெக்டே் மற்றும் நடிகை அனுஷ்கா ஆகியோர் கொல்லூருக்கு பலமுறை வருகை தந்ததாக அறியப்படும் பல நட்சத்திரங்களில் அடங்குவர். கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் மூகாம்பிகா கோவிலுக்குத் தவறாமல் வருகை தருகின்றனர். கேரள முதலமைச்சர் வி.டி. சதீசனுக்கு நெருங்கிய வட்டாரங்கள், அவர் கடந்த 5 ஆண்டுகளாகக் கொல்லூர் கோவிலுக்குத் தவறாமல் சென்று வருவதாகவும், மாதத்திற்கு ஒரு முறையாவது தவறாமல் தரிசிப்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக இசையமைப்பாளர் இளையராஜாவும் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதோடு இல்லாமல், 2025-ல், இளையராஜா பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை அம்மனுக்கு சமர்ப்பித்து, தனது வாழ்நாள் பக்தியை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டினார். பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாஸ் வழிபாட்டையே ஒரு கலை வடிவமாக மாற்றியுள்ளார். 2000-ஆம் ஆண்டு முதல், இந்தப் பாடகர் தனது பிறந்தநாளை இக்கோயிலில் கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு ஜனவரி மாதமும், அவர் அம்மனுக்கு முன்பாக “சங்கீதார்ச்சனை” செய்கிறார். அதே போல நடிகர் ரஜினிகாந்த் 2014ஆம் ஆண்டு இந்த கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அரசியல் கட்சி தலைவர்கள் இங்கு அடிக்கடி செல்வதற்கு ஆன்மீகம், ஜோதிடம் மற்றும் அரசியல் ரீதியாக காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் முப்பெரும் தேவியர் உள்ளனர். கொல்லூர் மூகாம்பிகை அம்மனாக மகாலட்சுமி (செல்வம்/செல்வாக்கு), மகாசரஸ்வதி (அறிவு/அரசியல் சாணக்கியத்தனம்), மாகாளி (வீரம்/எதிரிகளை வெல்லும் சக்தி) ஆகிய முப்பெரும் தேவியரின் வடிவமாகத் திகழ்கிறார். இங்குள்ள சுயம்பு லிங்கத்தில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் உள்ளனர்.
அரசியல்வாதிகளுக்கு தேவையான அதிகாரம், செல்வாக்கு மற்றும் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை கோவிலில் உள்ள முப்பெரும் தேவிகள் கொடுப்பதாக நம்பிக்கை உள்ளது. இதனால் இந்த கோவிலில் வேண்டி கொண்டால் மொத்த அதிகாரமும், அதனை சிறப்பாக நிர்வகிக்கும் ஆற்றலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு உள்ளது.
மேலும் கோவிலில் சண்டி ஹோமம் (சத்ரு சம்ஹாரம்) நடத்தும்போது அரசியலில் எதிர்ப்புகளும், துரோகங்களும், மறைமுக எதிரிகளும் வீழ்த்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இந்த கோவிலின் தீவிர பக்தர். அவர் தங்கவாள் காணிக்கையாக வழங்கி உள்ளார். அதேபோல், தான் ஜெயலலிதாவும். தமிழகத்தில் 2002ம் ஆண்டில் முதல்வராக பதவியேற்ற பிறகு 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சண்டி ஹோமம் நடத்தினார்.





