நயினார் நாகேந்திரனின் திடீர் டெல்லி பயணம்..!
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை கடந்த 2019ஆம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்.!தார். அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
திராவிட கட்சிகளுக்கு எதிரான ஆக்ரோஷமான அணுகுமுறை, என் மண் என் மக்கள் யாத்திரை, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் சாட்டையடி போராட்டம், அப்போதைய ஆளுங்கட்சியான திமுகவை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் வரை செருப்பு அணியப் போவதில்லை என முழக்கம் என்று அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டில் பாஜகவை உயிரோட்டத்துடன் வைத்திருந்ததில் அண்ணாமலையின் பங்கு அளப்பரியது.
அதேபோல், 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக, அண்ணாமலை தலைமையின் கீழ் களம் கண்டு இதுவரை இல்லாத அளவாக 11 புள்ளி 24 சதவீத வாக்குகளை பெற்று கவனம் ஈர்த்தது. இப்படி தமிழ்நாட்டில் பாஜகவின் அளப்பரிய வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்ட அண்ணாமலையை, அதிமுக கூட்டணிக்காக தேசியத் தலைமை கை கழுவியது. அண்ணாமலைக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தனது விருப்பத்தை மீறி அதிமுகவுடன் கூட்டணி, கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது என அண்ணாமலை தொடர்ந்து அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. மேலும், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடும் சூழல் வாய்க்காத நிலையில், தேசியத் தலைமையின் ஆணைக்கிணங்கி தேர்தல் பரப்புரையில் மட்டும் ஈடுபட்டார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. இப்படி அடுத்தடுத்து அதிருப்தியில் இருந்த அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல் பரவியது. இந்நிலையில், டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து ஐந்து பக்கங்கள் அடங்கிய தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளார். கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணங்களை அடுக்கடுக்காக பட்டியலிட்டு அண்ணாமலை கடிதம் வழங்கியதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகும் தனது நோக்கம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலை ராஜினாமா குறித்து விவாதிக்க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை உடனடியாக டெல்லிக்கு வருமாறு தேசியத் தலைமை உத்தரவிட்டது. இதையடுத்து, மதுரை, கோவை, சென்னை விமான நிலையங்களை தவிர்த்து திருவனந்தபுரம் வழியாக நயினார் நாகேந்திரன் டெல்லி விரைந்தார்.
இதனிடையே, மதுரையில் நடிகர் ரஜினிகாந்திடம் அண்ணாமலை வாழ்த்து பெறுவது போல், அருணாச்சலம் படத்தில் வரும் சிங்கம் ஒன்று புறப்பட்டதே பாடல் வரிகளுடன் பாஜக நிர்வாகி ஓட்டிய போஸ்டர்கள் சலசலப்பை ஏற்படுத்தியது. நயினார் நாகேந்திரனுடனான ஆலோசனையைத் தொடர்ந்தே அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என தேசியத் தலைமை முடிவு எடுக்கும் எனக் கூறப்படுகிறது.





