எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படப்பிடிப்பில் சிலிண்டர் விபத்து..!
நடிகர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வரும் கில்லர் படத்தில் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் குஷி, வாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. ‘மாநாடு’ படத்துக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிர்மறை கதாபாத்திரங்களுக்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் ‘மோஸ்ட் வான்டட்’ நடிகராக மாறியுள்ளார். இவர் கடைசியாக 2015-இல் இசை என்ற படத்தை இயக்கியிருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லர் என்ற புதிய படத்தை இயக்குகிறார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கோபாலன், ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் படத்தை தயாரிக்கின்றன.
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது. கடந்த ஆண்டே இந்தப் படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், இன்று சென்னை பெரம்பூர் பின்னி மில்லில் நடைபெற்று வந்த ‘கில்லர்’ படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய மதன் என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் அவதாரம் எடுத்த எஸ்.ஜே.சூர்யாவின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட இந்த திடீர் விபத்து திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





