திருச்சியில் விஜய் அனல் பேச்சு! சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ரியாக்சன்…! சுடச்சுட பதிலடி கொடுத்த திமுக, அதிமுக!
தமிழக அரசியல் களம் வழக்கமான பாதையிலிருந்து விலகி, புதியதொரு புயல் மையத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், திருச்சியில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) நன்றி அறிவிப்புக் கூட்டம், வெறும் மேடைப் பேச்சாக இல்லாமல், திமுக- அதிமுகவுக்கு ஒரே நேரத்தில் வைக்கப்பட்ட ‘செக்’ ஆக மாறியிருக்கிறது.
‘என் நெஞ்சில் குடியிருக்கும்…’ என்று தவெக தலைவர் விஜய் தனது வழக்கமான பாணியில் உரையைத் தொடங்கியபோதே, திருச்சி மைதானம் உற்சாக குரலால் அதிர்ந்தது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ‘முதல் சேவகன்’ என்கிற புதிய லேபிளோடு களமிறங்கியிருக்கும் விஜய்யின் திருச்சி உரை, கொஞ்சம் டல் ஆக இருந்த தமிழக அரசியல் களத்தை மீண்டும் சுறுசுறுப்பாக்கி இருக்கிறது.
திமுகவின் புலம்பல்களும்… திமுகவின் பதிலடியும்!
ஆட்சிப் பொறுப்பேற்று சில வாரங்களே ஆகியிருக்கும் நிலையில், தவெக அரசுக்கு எதிரான விமர்சனக் கணைகள் நாலாபுறமிருந்தும் பாயத் தொடங்கியுள்ளன. இதற்கு திருச்சியிலிருந்து மிகக் காட்டமான பதிலடியைக் கொடுத்திருக்கிறார் விஜய். “ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்கள் எல்லாம், அரை மணி நேரத்திலேயே ஆரம்பித்துவிட்டார்கள். பாவம், ஒரு கல்யாண வீட்டில் எல்லாம் சென்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்” என்று திமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார் விஜய்.
தான் சொன்ன வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நடந்து வருவதை சகித்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் தவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இத்தனை ஆண்டுகளாக மாறி மாறி ஏமாற்றிக் கொண்டிருந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் ஒதுக்கிவிட்டு, மக்கள் தன்னை முதல் சேவகனாக்கிய பெருமிதத்தை நன்றியோடு வெளிப்படுத்தினார்.
ஜென்-ஸி தலைமுறையின் அரசியல் விழிப்புணர்வு!
விஜய்யின் பேச்சில் மிக முக்கியமான ஹைலைட், தற்போதைய ‘ஜென்-ஸி’தலைமுறையினரைப் பற்றிய அவரது கூர்மையான கணிப்புதான். தவெகவை பார்த்து திமுகவும் ஜென் ஸி தலைமுறையினரை கவர்ந்து இழுக்க, ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்த அறிக்கை வெளியிடுவதாக, உதயநிதியை அட்டாக் செய்தார். ‘ரீல்ஸ் போடும் தற்குறிக் கூட்டம்’ என்று விமர்சித்தவர்களால் இன்று திமுக அதிகாரத்தில் இருந்து துரத்தப்பட்டுள்ளதாக விஜய் சாடினார்.
“சட்டசபையில் யார் பேசினால் நமக்கு என்ன என்று இருந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் கூட்டம், இப்போது அங்கு என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது. திமுக ஸ்டைலிலேயே சொல்ல வேண்டும் என்றால், ரீல்ஸ் போட்ட கூட்டம் எல்லாம் இப்போது நியூஸ் பார்க்கத் தொடங்கிவிட்டது” என்று அதிரடி காட்டினார். மக்களை ‘தற்குறி’ என்று விமர்சிப்பவர்களின் அரசியல் வாழ்க்கைதான் இப்போது கேள்விக்குறியாகியிருக்கிறது என்று திமுகவை நோக்கி நேரடியாகவே விரல் நீட்டினார்.
பிளாக் அண்ட் வொயிட் கோட் சூட் ரகசியம்!
சமீபகாலமாக விஜய் கோட் சூட் அணிந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இதற்கு திருச்சியில் மிக எளிமையாக விளக்கமாக அளித்தார் விஜய். “அதிகாரம் செய்பவர்களும் ஆதிக்க சக்திகளும் மட்டும்தான் கோட் சூட் போட வேண்டுமா? எல்லாவற்றிலும் நான் பிளாக் அண்ட் வொயிட் ஆக, அதாவது வெளிப்படையாக இருப்பேன் என்பதைக் காட்டவே இந்த நிறத்தைத் தேர்வு செய்திருக்கிறேன். இந்த பிளாக் கலர் எதைக் குறிக்கும் என்பது உங்களுக்கே தெரியும்” என்று பெரியாரியக் கொள்கைக்கான குறியீட்டை சூசகமாக உடைத்தார்.
தான் நசநசவெனப் பேசும் டைப் இல்லை என்றும், தனது வேகம் 20 நிமிடப் பேச்சிலேயே அடங்கியிருக்கிறது என்றும் விமர்சகர்களின் வாயை அடைத்தார்.
தீய சக்தியும் தீந்துபோன சக்தியும்- விஜய் சுளீர்!
அரசியல் அரங்கைக் அதிர வைத்த விஜய்யின் அடுத்த அம்பு, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே நேர்கோட்டில் வைத்து தாக்கியதுதான். தவெக ஆட்சி அமைந்தால் தங்களின் ஊழல், லஞ்சம் மற்றும் பிழைப்பு போய்விடும் என்ற பயத்தில், ‘தீய சக்தி’யான திமுகவும், ‘தீந்துபோன சக்தி’யான அதிமுகவும் திரைக்குப் பின்னால் கரம் கோர்க்க முயல்வதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
“இந்தத் தீய சக்தியும், தீந்துபோன சக்தியும் யாருக்கும் தெரியாமல் ஒரு ஓரமாக மூலையில் உட்கார்ந்து பேரம் பேசி, கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கத் திட்டம் போட்டார்கள்” என்று அரசியல் வெடியைக் கொளுத்திப் போட்டார். மேலும், திமுக இப்போது வெறும் தீய சக்தி மட்டுமல்ல; மக்களை விட்டுத் தூரமாகப் போன தூர சக்தி, ஓர சக்தி, கோர சக்தி என அடுக்குமொழியில் சாடினார்.
சட்டம் ஒழுங்கு- திமுகவை சாடிய விஜய்!
சட்டம் ஒழுங்கு பற்றி பேசிய விஜய், “மாடல் அரசு மாடல் அரசு என்று சொல்கிறீர்களே, அதில் என்ன செய்து வைத்துவிட்டு சென்றிருக்கிறீர்கள்? ஒரு ஊர் விடாமல், தெரு விடாமல் போதைப்பொருள் கலாச்சாரத்தை பரப்பி வைத்திருக்கிறீர்கள்.
அதை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்தியிருந்தால் இத்தனை பெண் குழந்தைகளை, பெண்களை இழக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்குமா?. எல்லாவற்றையும் செய்துவிட்டு பழியை தூக்கி என் மீது போடுகிறார்கள்” என்று விளக்கம் கொடுத்தார்.
அதே நேரத்தில், மதச்சார்பற்ற கொள்கை, மாநில உரிமைகள், நதிநீர் உரிமைகள் மற்றும் சமூக நீதி ஆகியவற்றில் தவெக அரசு ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்றும், ஸ்டாலின் போல தன்னிடம் எந்த ஊசலாட்டமும் இருக்காது என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.
மின் கட்டணம்- விஜய் கொடுத்த விளக்கம்!
திமுகவின் தற்போதைய விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த விஜய், இலவச மின்சாரத் திட்டம் குறித்த ஒரு முக்கிய உண்மையைப் போட்டுடைத்தார். “நாம் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்தவுடன், ஸ்டாலின் சார் பதவியை இழந்த கடுப்பில் அறிக்கை விடுகிறார்.

உண்மையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் திமுக கொடுத்ததல்ல, அது ஜெயலலிதா மேடம் கொடுத்தது” என்று சுட்டிக்காட்டினார். டாஸ்மாக் கொள்ளைப் பணத்தை மறைக்க நினைத்தவர்களின் ஃபைல்களை மூடிவிட்டு, மக்களின் துயர் துடைக்க டாஸ்மாக்கை மூடியும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தும் அதிரடி காட்டியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
‘பூமராங் ஆகும்’ என சீறும் அறிவாலயம்!
விஜய்யின் இந்த அதிரடிப் பாய்ச்சலுக்கு திமுக தரப்பிலிருந்து உடனடியாக எதிர்வினைகள் வரத் தொடங்கிவிட்டன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன், விஜய்யின் நிர்வாகக் குளறுபடிகளை மிகக் காட்டமாக விமர்சித்தார். “விஜய் திருச்சியில் முதல்வராகப் பேசினாரா அல்லது தவெக தலைவராகப் பேசினாரா என்ற குழப்பம் நீடிக்கிறது. டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்துவிட்டு வந்தவர், ஏன் செய்தியாளர்களைச் சந்திக்காமல் தப்பியோடினார்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், சுயமரியாதை மேடைகளான திருமண மேடைகளைத் தாங்கள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதில் தவறில்லை என்றவர், “மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சோபா மாடல் அரசு தோல்வியடைந்துவிட்டது. விஜய் இன்னும் தான் ஆட்சியில் இருப்பதை மறந்துவிட்டு, திமுகவை எதிர்க்கட்சியாக நினைக்காமல் ஆளுங்கட்சியாக நினைத்து விமர்சிப்பது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல்; இது அவருக்கே பூமராங் ஆகும்” என்று எச்சரித்தார்.
வாடகை சக்தி விஜய்- அதிமுகவின் நக்கல் பதிவு!
விஜய்யின் ‘தீந்துபோன சக்தி’ என்ற விமர்சனத்திற்கு அதிமுகவின் மாநிலங்களவை எம்பி இன்பதுரை தனது எக்ஸ் தளத்தில் மிகச் சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் பதிலடி கொடுத்துள்ளார். தவெக-வின் சமூக வலைத்தளத்தைக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இரவல் சக்தியால் கோட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் வாடகை சக்தியை வீழ்த்தப் போகும் உண்மையான மக்கள் சக்தி அதிமுக தான்” என்று பதிவிட்டு, தற்போதைய தவெக ஆட்சியை ‘வாடகை சக்தி’ என நக்கல் செய்துள்ளார்.
செல்லப் பிள்ளைக்குக் காத்திருக்கும் பரீட்சை!
விமர்சனங்கள் ஒருபுறம் எரிமலைக் குழம்பாய் கொதித்துக் கொண்டிருக்க, விஜய்யின் பார்வை அடுத்ததாக வரவிருக்கும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் மீது பதிந்திருக்கிறது. “தமிழ்நாட்டின் 234 தொகுதிகளும் நமது தொகுதிதான் என்றாலும், திருச்சி கிழக்கு என் செல்லப் பிள்ளை. வரப்போகிற இடைத்தேர்தலில் உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்தப் போகிறேன்” என்று எமோஷனல் கார்டை வீசியுள்ளார்.
ஊழலற்ற, லஞ்சமற்ற ஆட்சியை அமைப்பது ஒரே நாளில் நடக்கும் மேஜிக் இல்லை என்றாலும், அதை ஒரு நாள் சாத்தியமாக்குவேன் என்ற உறுதியோடு விஜய் விடைபெற்றிருக்கிறார். திராவிடக் கோட்டைகளின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கத் துடிக்கும் தவெக-வின் இந்த வேகமும், அதற்குப் பதிலடி கொடுக்கத் துடிக்கும் திமுக, அதிமுகவின் வியூகங்களும் தமிழக அரசியலை வரும் நாட்களில் மேலும் விறுவிறுப்பாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!





